சென்னை: டெல்லியில் கடந்த வாரம் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு பெண் காவல் அலுவலர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். இதனையடுத்து இந்தக் கொடூர குற்றச் செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளைக் கண்டறிந்து தண்டனை பெற்றுத்தரக்கோரி, நாடு முழுவதும் பொதுமக்கள் உள்ளிட்டோர் போராடிவருகின்றனர்.
இந்நிலையில் பெண் காவலர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளைக் கைது செய்யக்கோரி, தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் சார்பில் நேற்று (செப். 8) தாம்பரம் சண்முகம் சாலையிலிருந்து பேருந்து நிலையம் வரை பேரணியாக வந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
குற்றவாளிகளைப் பாதுகாக்க நாடகம்
இதில் மனித நேய மக்கள் கட்சி மாவட்டத் துணைப் பொதுச்செயலாளர் யாகூப், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
இது குறித்து வன்னியரசு பேசுகையில், “டெல்லியில் காவல் துறையில் பணியாற்றும் பெண்ணை கடத்திச் சென்று, கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கி படுகொலை செய்துள்ளனர், இதுநாள் வரை படுகொலையில் தொடர்புடையவர்களை காவல் துறை கைது செய்யவில்லை.
குற்றவாளிகளைப் பாதுகாக்க காவல் துறை நாடகமாடி வருகின்றது. கொலையாளிகளைக் கைது செய்யாமல் மத்திய அரசு பாதுகாக்கிறது. இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும்.
ஆயுள் தண்டனை கைதிகளை விடுவிக்க கோரிக்கை
தமிழ்நாட்டில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம் எனத் தீர்மானம் நிறைவேற்றம், எஸ்.சி., எஸ்.டி. ஆணையம் அமைப்பு, ஜாதி ஒழிப்புக்கு முன்னுதாரணமாக உள்ள கிராமத்திற்கு பத்து லட்சம் வழங்கப்படும் என்ற அறிவிப்பு ஆகியவற்றை வரவேற்கிறோம்.
அதேபோல் தமிழ்நாட்டில் உள்ள ஆயுள் கைதிகள் இரண்டாயிரத்து 548 பேரை, அண்ணா பிறந்த நாளன்று விடுதலை செய்ய வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க: உதவி ஆணையர் மகளிடம் சில்மிஷம் - போக்குவரத்து காவலர் கைது