சென்னை: பூத் கமிட்டி அமைப்பது, புதிய நிர்வாகிகளை கட்சியில் சேர்ப்பது உள்ளிட்ட பணிகளுக்காக மாவட்ட பொறுப்பாளர்கள் 109 பேரின் பட்டியலை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இந்த பொறுப்பாளர் பட்டியலில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் பெயர்கள் இடம்பெற்றிருக்கும் நிலையில் செங்கோட்டையன் பெயர் தவிர்க்கப்பட்டுள்ளது.
செங்கோட்டையன் புறக்கணிப்பு: அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை செயல்படுத்தியதற்காக, கோவை அன்னூர் பகுதியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அண்மையில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இந்த விழாவுக்கான அறிவிப்புகள், விழா நடைபெற்ற பந்தல் ஆகியவற்றில் அதிமுக நிறுவனர் எம் ஜி ஆர், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் படங்கள் இடம்பெறவில்லை. இந்த காரணத்துக்காக நிகழ்வில் பங்கேற்காமல் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் புறக்கணித்ததாக செய்திகள் வெளியாயின.
செங்கோட்டையன் கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் தன்னுடைய கோபிசெட்டிபாளையம் தொகுதியில் குள்ளம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக நடைபெற்ற மற்றொரு நிகழ்ச்சியில் அதிமுகவின் பொதுச் செயலாளர் என்று மட்டுமே தெரிவித்து எடப்பாடி பழனிசாமியின் பெயரை குறிப்பிடுவதை செங்கோட்டையன் தவிர்த்தார். இது கட்சியினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.
மூத்த நிர்வாகிகளை தள்ளிவைக்கும் இபிஎஸ்: இந்த நிலையில் அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் நியமனப் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இடம் பெறவில்லை. இதுகுறித்து ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் துரை கருணா, "2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்குள் அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற அனைத்து தலைவர்களும் ஒருங்கிணையவில்லை என்றால் பெரிய அளவில் கூட்டணி கூட அமைக்க முடியாது. எனவே 2026 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெறவும் சாத்தியம் இல்லை.
சில வருடங்களாகவே செங்கோட்டையன் உள்பட மூத்த கட்சி நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்களின் செல்வாக்கை குறைக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமியின் அணுகுமுறைகள் உள்ளன. எம்ஜிஆர், ஜெயலலிதா காலங்கள் முதல் தற்போது வரை தமிழ்நாட்டின் கிராமங்கள் வரை அனைவராலும் அறியப்பட்ட நபராக செங்கோட்டையன் உள்ளார். 9 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார்.
எடப்பாடிக்கு ஆபத்து: அவருடைய முக்கியத்துவத்தை குறைக்கும் வகையில் அதிமுகவின் தலைமை செயல்படுகிறது. கட்சியின் அனைத்து மட்டத்திலும் செங்கோட்டையனுக்கு ஆதரவு நிலைப்பாடு இருக்கிறது. மற்ற மூத்த நிர்வாகிகளை புறக்கணிப்பது போல் செங்கோட்டையனையும் புறக்கணித்தால் அது எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆபத்தாகவே அமையும்.
இதற்கு முன்னர் கள ஆய்வு குழுவிலும் செங்கோட்டையன் புறக்கணிக்கப்பட்டார். மேலும் ஈரோடு மாவட்டத்தில் செங்கோட்டையனுக்கு எதிரான மனநிலைமையில் இருக்கும் நிர்வாகிகளுக்கு மாவட்ட மற்றும் மாநில பொறுப்புகளை வழங்கி வருகிறார்கள். அதேபோல் தலைமை கழகத்தில் நடைப்பெறும் நிகழ்ச்சிக்கும் செங்கொட்டையனை அழைப்பதில்லை. இதுபோன்ற நடவடிக்கைகள் தொடர்ந்தால், எடப்பாடி பழனிச்சாமி விரைவில் மிகப்பெரிய பிரச்சனையை எதிர்கொள்வார்.
அரசியல் ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் எடப்பாடி பழனிச்சாமி நெருக்கடியில் சிக்கியுள்ளார். நெருக்கடிகளில் இருந்து மீள வேண்டும் என்றால் தன்னுடைய பிடிவாதத்தை தளர்த்தி அனைவரையும் ஒன்று சேர்க்க முன்வர வேண்டும். பொதுச் செயலாளர் என்ற பதவியில் அமர்ந்தவுடன் மாவட்டம் மற்றும் மாநில அளவில் செல்வாக்கு உடைய நிர்வாகிகளை புறக்கணிக்க தொடங்கிவிட்டார்.
தன் பேச்சை கேட்க வேண்டும்; தான் சொல்வதை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் அப்படிப்பட்ட நிர்வாகிகளை தன்னுடன் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற மனப்போக்குக்கு எடப்பாடி பழனி்சாமி வந்துள்ளார். இது ஆபத்தான மனப்போக்கு. அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற தலைவர்கள் மீண்டும் ஒன்று சேராவிட்டால் அதிமுகவுக்கு மிகப்பெரிய பாதிப்பு வரும் என்பதை எடப்பாடி பழனிசாமி உணர்வாரா என்பது தெரியவில்லை.
மக்கள் செல்வாக்கு இல்லை: 40 சதவிகிதத்துக்கும் மேல் இருந்த கட்சியின் வாக்கு சதவிகிதம் தற்போது பாதியாக குறையும் வகையில் எடப்பாடி பழனிசாமி கட்சியை வழிநடத்தி வருகிறார். அடிப்படை கட்சி உறுப்பினர்கள் முதல் நிர்வாகிகள் வரை அனைவரிடமும் மனக்குமுறல்கள் உள்ளன. அது எந்த நேரத்திலும் வெடிக்கலாம். அப்படி வெடித்தால் எடப்பாடி பழனிசாமிக்கான எதிர்காலம் கேள்விக்குறியாக மாறிவிடும்.
எம்ஜிஆர், ஜெயலலிதாவைப்போல எடப்பாடி பழனிசாமிக்கு மக்கள் செல்வாக்கு இல்லை. நான்கரை ஆண்டு முதலமைச்சர் மற்றும் கட்சியின் பொதுச் செயலாளர் என்ற உயர் பொறுப்பின் மூலமாக அனைவரையும் கட்டுப்படுத்தி வைத்துள்ளார். ஆனால் இது ஒரு மாயத் தோற்றமாக தான் இருக்கிறது. அதிமுகவில் பிரிந்தவர்கள் ஒன்றிணைய வேண்டும். மூத்த நிர்வாகிகளை அரவணைத்து செல்ல வேண்டும். அபோதுதான் 2026 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியை பிடிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. அதைத் தவிர்த்து இப்படி மனம் போன போக்கில் நிர்வாகிகளை நியமிப்பதால் மட்டும் வெற்றி பெற்று விட முடியாது," என்று துரை கருணா கூறியுள்ளார்.