சென்னை: சென்னை ஐஐடியின் இயக்குநராக இருந்த பாஸ்கர் ராமமூர்த்தியின் பதவிக்காலம் முடிவடைந்ததையடுத்து, புதிய இயக்குநராக பேராசிரியர் காமகோடி வீழிநாதனை நியமனம் செய்து ஒன்றிய அரசு கடந்த 10ஆம் தேதி அறிவித்தது.
இதையடுத்து, புதிய இயக்குநராக இன்று (ஜன.17) பொறுப்பேற்றுக் கொண்டார். சென்னை ஐஐடி கம்ப்யூட்டர் அறிவியல் மற்றும் பொறியியல் துறைப் பேராசிரியராக காமகோடி உள்ளார். தொழில்துறை ஆலோசனை மற்றும் நிதியுதவி ஆராய்ச்சிக்கான (ஐசிஎஸ்ஆர்) அசோசியேட் டீனாகவும் உள்ளார். ஒன்றிய அரசின் தேசியப் பாதுகாப்பு ஆலோசனைக் குழுவின் உறுப்பினர் உட்பட பல்வேறு அரசு அமைப்புகளில் பதவி வகித்து வருகிறார்.
புதிய இயக்குநராகப் பொறுப்பேற்றப் பின் பேராசிரியர் காமகோடி கூறுகையில், "கல்வி அமைச்சகத்தின் தேசிய நிறுவனத் தரவரிசைக் கட்டமைப்பில் (NIRF) சென்னை ஐஐடியின் நிலையைத் தக்கவைத்துக் கொள்வதுடன், கல்வி மற்றும் ஆய்வின் தரத்தை மேம்படுத்துவதும் முக்கிய கவனமாக இருக்கும்.
பன்முகத் தன்மை கொண்ட பாடத் திட்டம்
ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சித் துறையில் எங்களின் அதிநவீன பணியின் மூலம், மத்திய மாநில அரசுகளுடனான ஒத்துழைப்பை மேலும் அதிகரிக்க முயற்சிப்போம். இதன் மூலம் நாட்டின், நாட்டு மக்களின் தேவைகளை அறிந்து அதை நிறைவேற்றும் வகையில் எங்கள் பணிகளைத் திட்டமிட்டு, ஒட்டு மொத்த வளர்ச்சிக்குப் பங்களிப்போம்.
இணைய வழிக் கல்வி மற்றும் தொலைதூரக் கல்வியின் வீச்சையும் தாக்கத்தையும் அதிகரித்தல், பாடத்திட்டத்தை வலுவாக்க, பள்ளிக் கல்வி வாரியங்களுடன் ஒருங்கிணைந்து பணியாற்றுவோம். தொழிற் கல்விப் பயிற்சிக்கான தரத்தை உயர்த்த திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் வகுத்தல், பள்ளி மாணவர்களிடையே அறிவியல் மற்றும் ஆய்வில் ஈடுபாட்டை ஊக்குவிக்க அவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சிகளை நடத்துவோம்.
சர்வதேச மாணவர்களுக்கான தொழில் சார்ந்த எம்.டெக் படிப்பை அறிமுகப்படுத்துதல், மொழித் திறன், தத்துவம், கலை, சுற்றுச் சூழல், நல்லொழுக்கம் ஆகியவற்றுக்குச் சிறப்பு முக்கியத்துவம் அளித்து, பன்முகத் தன்மை கொண்ட பாடத் திட்டத்தை மேம்படுத்துவோம்.
வேளாண்மையை புதுப்பித்தல், தொழில்துறை, மருத்துவத் தொழில்நுட்பம், ஸ்மார்ட் சிவில் கட்டுமானத் தொழில்நுட்பம் உள்ளிட்ட சமூகப் பிரச்சினைகளை முன்னிறுத்தி அவற்றுக்கான ஆய்வுகளை மேம்படுத்துவோம். செயற்கை நுண்ணறிவு சார்ந்த ஹைப்பர் ஆட்டோமேஷன் தொழில்நுட்பம் மூலம் மேம்பட்ட நிர்வாகம் அளித்தல் ஆகியவற்றிலும் சிறப்பான பணி இருக்கும்" என்று தெரிவித்தார்.
பேராசிரியர் காமகோடி, மொபைல் கம்ப்யூட்டிங் சாதனங்கள் மற்றும் நெட்வொர்க்கிங் சிஸ்டங்களில் பயன்படுத்தக்கூடிய இந்தியாவின் முதல் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட நுண்செயலியான ‘சக்தி’யை வடிவமைத்த ஆராய்ச்சிக் குழுவை வழிநடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் முதலமைச்சர் ஆய்வு