'ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் ஒரு லட்சம் தொழிலாளர்கள் வேலை இழப்பு' - ஸ்டெர்லைட் ஆலை ஆதரவு கூட்டமைப்பு
ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் ஒரு லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்து, தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளதால் தமிழ்நாடு அரசு உடனடியாக ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்டெர்லைட் ஆலை ஆதரவு கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை ஆதரவு கூட்டமைப்பினர் சென்னை தலைமைச் செயலகத்தில், தலைமைச் செயலாளர் அலுவலகத்தில் இன்று(மார்ச்.3) மனு ஒன்றை அளித்தனர்.
அந்த மனுவில் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டெர்லைட் ஆலை ஆதரவு கூட்டமைப்பைச் சேர்ந்த நான்சி, "வேலையிழப்புகள் தூத்துக்குடி மக்களின் வாழ்வாதாரத்தை முடக்குகின்றன. ஸ்டெர்லைட்டை மீண்டும் திறக்கக்கோரி முதலமைச்சரின் சிறப்புப் பிரிவுக்கு 1 லட்சம் ஆன்லைன் மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன.
நிரந்தரமாக மூடுவது தீர்வல்ல
தூத்துக்குடி காற்றுமாசுபாட்டிற்கு சாலைப் புழுதியும், வாகனப் புகையும் முக்கியக் காரணம் என்று பல அறிக்கைகள் உறுதிப்படுத்தியுள்ளன. ஆலை மூடப்பட்டதில் இருந்து காற்றுமாசு அளவில் எந்த மாற்றமும் இல்லை.
ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் பாதிக்கப்பட்டுள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள், ஒப்பந்ததாரர்கள், லாரி உரிமையாளர்கள், மீனவர்கள், வியாபாரிகள், கனரக வாகன பழுதுபார்ப்பவர்கள் உள்ளடக்கிய கூட்டமைப்பு சார்பில், ஆலையை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கக்கோரிக்கை விடுத்துள்ளோம்.
ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் சுமார் 20,000 தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை சார்ந்திருந்த பல்வேறு தொழில்களும் முடங்கியதால் பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. வேலை இழந்தவர்கள் அன்றாட உணவிற்குக்கூட வழியில்லாமல் தூத்துக்குடியை விட்டு வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
பொய் பிரசாரத்தின் மூலம் மக்களை நம்பவைத்து ஆலை மூடப்பட்டதன் விளைவாக, தூத்துக்குடி மற்றும் தமிழ்நாட்டின் பொருளாதாரம் மிகவும் பாதிப்படைந்துள்ளது. தமிழ்நாடு அரசு இதனைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஸ்டெர்லைட் ஆலை தவறிழைத்திருந்தால் அதற்கான தீர்வு என்ன என்பதைக் கண்டறிந்து சரிசெய்ய வேண்டும். நிரந்தரமாக ஆலையை மூடுவது என்பது எந்த விதத்தில் தீர்வாக இருக்கக் கூடும்.
மக்களுக்கு ஸ்டெர்லைட் ஆலை உதவி
ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதிலிருந்து உள்ளூர் மக்கள் பயனடையும் வகையில் ஸ்டெர்லைட் நிறுவனம் தொடர்ந்து சமூகப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. மாணவர்களுக்கு கல்வி உதவி, மக்களுக்கு மருத்துவ உதவி உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து வருகிறது.
எங்களுக்கென்று வேலை வாய்ப்பு இருந்தால் மட்டுமே எங்களின் வாழ்வாதாரத்தை முற்றிலுமாக மீட்டெடுக்க முடியும். கடந்த 25 ஆண்டுகளாக தூத்துக்குடி மக்களின் வாழ்வாதாரம் மேம்படுவதற்கு உதவியாக இருந்த ஸ்டெர்லைட் நிறுவனம் மீண்டும் திறக்கப்பட்டு, வேலை வாய்ப்பு வழங்கி பொதுமக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட தமிழ்நாடு அரசு துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: 'உக்ரைனிலுள்ள தமிழர்களை மீட்க திருச்சி சிவா, கலாநிதி வீராசாமி உட்பட 4 பேர் வெளிநாடு பயணம்'