சென்னை: தமிழ்நாட்டில் செப்டம்பர் ஒன்றாம் தேதி ஒன்பதாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்புவரை படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. இதுகுறித்த அரசின் உத்தரவில், "50 விழுக்காடு மாணவர்கள் மட்டுமே பள்ளிகளுக்கு அழைக்கப்பட வேண்டும்.
மீதி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடம் நடத்த வேண்டும். 45 நாள்கள்வரை பாடங்கள் எடுக்கக் கூடாது. மாணவர்களை கற்றலுக்கு தயார் படுத்தக்கூடிய நிகழ்ச்சிகள் மட்டுமே நடத்த வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் தனியார் பள்ளிகளில் இந்த உத்தரவுகள் மீறப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக 10 முதல் 12ஆம் வகுப்புவரை படிக்கும் மாணவர்கள் 100 விழுக்காடு அளவிற்கு பள்ளிகளுக்கு வரவழைக்கப்படுகின்றனர். ஆன்லைன் மூலம் நடைபெறும் வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
தனியார் பள்ளிகளின் இந்த நடவடிக்கை காரணமாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பின்னடைவு ஏற்படும் என அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கவலை தெரிவித்துள்ளனர். எனவே அரசின் விதிமுறைகளை மீறும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநிலத் தலைவர் தியாகராஜன் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: பள்ளிக்கு வர வேண்டாம்... மாணவர்களுக்கு திடீர் அறிவிப்பு!