சென்னை: செனாய் நகரில் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு அருகே நிறுத்தி வைத்திருந்த தனியார் பேருந்து ஒன்று திடீரென தீப்பிடித்து மளமளவென எரிந்தது. இதனைக்கண்ட பொதுமக்கள் உடனடியாக தீயணைப்புத்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் அண்ணா நகர் மற்றும் வில்லிவாக்கம் தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
ஆனால், அதற்குள் தீயானது பேருந்து முழுவதுமாக பரவி எரிந்து நாசமானது. சுமார் 20 நிமிடங்களாக தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். இதனையடுத்து தீயணைப்புத்துறையினர் நடத்திய விசாரணையில், செனாய் நகரில் நடைபெற்று வரும் மெட்ரோ பணிகளை BL காஷ்யப் என்ற கட்டுமான நிறுவனம் துணை ஒப்பந்த அடிப்படையில் மேற்கொண்டு வருவகிறது.
இந்தப் பணிக்காக திருவேற்காடு பகுதியிலிருந்து தினமும் 50 ஊழியர்களை செனாய் நகர் பகுதிக்கு தனியார் நிறுவனப்பேருந்து மூலமாக அந்நிறுவனம் அழைத்து வருவது தெரியவந்தது. இதேபோல, இன்று காலை 8 மணிக்கு ஓட்டுநர் பிரகாஷ் திருவேற்காடு பகுதியிலிருந்து ஊழியர்களை அழைத்துவந்து பேருந்தை ஓரமாக நிறுத்தியுள்ளார்.
அப்போது தான் திடீரென தீப்பிடித்து எரிந்ததும் விசாரணையில் தெரியவந்தது. மேலும் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து அமைந்தகரை காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: தென்மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை