சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்குகளை விரைந்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதைதொடர்ந்து, சென்னையில் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டது. பிற மாவட்ட நீதிமன்றங்களில் நிலுவையில் இருந்த வழக்குகள் சென்னை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டன.
இதனிடையே, சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள பிற மாவட்ட எம்பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை அந்தந்த மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றங்கள் விசாரிக்கும் எனவும், இந்த வழக்குகள் தொடர்பான ஆவணங்களை அந்தந்த மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றங்களுக்கு அனுப்பவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், மாவட்ட முதன்மை நீதிமன்றங்களை எம்எல்ஏ, எம்பிக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றங்களாக அறிவித்து சென்னை உயர் நீதிமன்ற பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த சிறப்பு நீதிமன்றங்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் மீதான வழக்குகளை தினந்தோறும் விசாரித்து ஆறு மாதத்தில் முடிக்க வேண்டுமெனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. எம்எல்ஏ, எம்பிக்கள் மீதான வழக்குகளை விசாரித்து வரும் மாவட்ட முதன்மை நீதிபதிகள், மாதந்தோறும் அதுகுறித்த விவரங்களை அறிக்கையாக உயர்நீதிமன்ற பதிவாளருக்கு அனுப்ப வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.