கரோனா பெருந்தொற்று காரணமாக 2020-2021ஆம் கல்வியாண்டில் நடக்கவிருந்த 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.
12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்படும் முறை குறித்து விளக்கமளித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
பேரிடர் காலங்களில் தேர்வு
இந்நிலையில், ஊரடங்கு காரணமாக ஏற்பட்டப் பொருளாதார நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, அனைத்து உயர் கல்வி நிறுவனங்களிலும் விலையில்லா விண்ணப்பப் படிவங்கள் வழங்க வேண்டும் என பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,'சுனாமி, வெள்ளம், புயல் போன்ற இயற்கைப் பேரிடர் காலங்களில் வகுப்புகள் சில மாதங்கள் நடக்காமலேயே பொதுத் தேர்வைச் சந்திக்க வேண்டிய சூழல் உருவானது.
அத்தகைய காலங்களில் நடந்த பொதுத் தேர்வை எழுதிய மாணவர்களில் 90 விழுக்காட்டிற்கு மேலானவர்கள் தேர்ச்சி பெற்றனர். தற்போது தேர்வு நடத்தப்பட்டிருந்தாலும், அதிகளவிலான மாணவர்கள் தேர்ச்சி பெறுவதோடு, சிறப்பான மதிப்பெண்களும் பெற்றிருப்பர்.
முதலமைச்சருக்கு நன்றி
இந்நிலையில், தேர்வுகளை ரத்து செய்தபோதும், எந்த மாணவரையும் பாதிக்காத வண்ணம், பள்ளிக் கல்வி முழுமையையும் கணக்கில் எடுத்து, சீரான மதிப்பெண் வழங்கக் கூடிய மதிப்பீட்டு முறையை வெளியிட்டிருக்கும் முதலமைச்சருக்கு வாழ்த்துகளையும், நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
விலையில்லா விண்ணப்பங்கள்
ஊரடங்கு காலப் பொருளாதார நெருக்கடியைக் கருத்தில் கொண்டு எல்லா வகை உயர் கல்வி நிறுவனங்களிலும் விண்ணப்பப் படிவங்கள் கட்டணம் இல்லாமல் வழங்கப்பட்டு, பன்னிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற அனைவரும் உயர்கல்வி பெற்றிட, அனைத்து உதவிகளையும் அரசு செய்து தர வேண்டும்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:+2 பொதுத்தேர்வு: மதிப்பெண் வழங்கும் முறை அறிவிப்பு