கிழக்குத் தொடர்ச்சி மலை பசுமை மீட்பு இயக்கம் சார்பில் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடந்தது. இதில் ஓய்வுபெற்ற நீதிபதி மதிவாணன், இந்த அமைப்பின் இயக்குநர் சாய் பாஸ்கர் ரெட்டி, பசுமை புரட்சி கவுன்சில் நிறுவனர் லக்ஷ்மா ரெட்டி ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்தப் பத்திரிகையாளர் சந்திப்பின்போது, தான் எழுதிய புத்தகத்தை வெளியிட்டபின் செய்தியாளர்களிடம் பேசிய சாய் பாஸ்கர் ரெட்டி,
"கிழக்குத் தொடர்ச்சி மலை தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, ஒடிசா, கர்நாடக மாநிலங்களில் பரவிஉள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலை, இமாலய மலைகளுக்கு தரும் முக்கியத்துவம் இதற்குத் தரப்படவில்லை. இந்த மலைத் தொடர்களில் இயற்கை வளங்கள் அழிக்கப்பட்டுவருகின்றன.
கனிமவள சுரண்டல், மரம் வெட்டுதல், காடுகளை அழித்தல் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் கிழக்குத் தொடர்ச்சி மலை இயற்கை அமைப்பு சிதைந்துவருகிறது.
எனவே இவற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ஐந்து மாநில நாடாளுமன்ற உறுப்பினர்களை ஒருங்கிணைத்து ஒரு கூட்டம் நடத்த இருக்கிறோம். இதில் பல்வேறு உயர் அலுவலர்களும் கலந்துகொள்ளவைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளோம். ஒரு குறிப்பிட்ட மரம் வகையிலேயே அதிக முறை நட்டுவருகிறோம்.
இதனால் எந்தப் பயனும் அளிக்காது. எனவே கிழக்குத் தொடர்ச்சி மலை போன்ற உயிரி பன்மை காரணிகளை நாம் பாதுகாக்க வேண்டும். சென்னையில் நட்டு வளர்க்கப்படும் அயல்நாட்டு மரங்கள் எவ்வித பலனையும் அளிக்காது" எனக் கூறினார்.
இதையும் பார்க்க: '4 ஆண்டுகளாக ஊதிய உயர்வு வழங்கவில்லை' - தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு