சென்னை: தேமுதிக நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த்தின் பிறந்த நாளை ஆண்டுதோறும் தமிழ்நாடு முழுவதும் தேமுகவினர் வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் தனது 71ஆவது பிறந்த நாளையொட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை கழகத்திற்கு விஜயகாந்த் வருகை தந்தார். காலையிலிருந்து சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை கழகத்திற்கு ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் அதிக அளவில் வருகை தந்தனர்.
இதனையடுத்து பேசிய பிரேமலதா விஜயகாந்த், “தேமுதிக தலைவர் விஜயகாந்த் சூப்பராக உள்ளார். யார் எதை சொன்னாலும் நம்பாதீர்கள். வராரு, வராரு அழகர் வாராரு என்ற பாடல் போட்டவுடன் விஜயகாந்த் டான்ஸ் ஆடுகிறார். உங்கள் அனைவரையும் பார்த்த சந்தோசம் அவர் முகத்தில் தெரிகிறது. தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் உடல்நிலை குறித்து தவறான தகவலை வெளியிட்ட தொலைக்காட்சிகளுக்கு எனது கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
மீடியா, யூடியூப் சேனல்கள் விஜயகாந்தின் உடலை பற்றி தவறாக எழுதாதீர்கள். கடைக்கோடியில் உள்ள தொண்டர்கள் வருத்தம் அடைகிறார்கள். உண்மை தொண்டர்களின் வாழ்த்து விஜயகாந்தை நூறாண்டு வாழ வைக்கும். தொண்டர்களின் வாழ்த்துகள் இருக்கும் வரை விஜயகாந்த் 100 வயது வரை இருப்பார். நமது முரசு நாளைய தமிழக அரசு. வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது தமிழாக இருக்க வேண்டும். தொண்டர்கள் அனைவரும் சாப்பிட்டு விட்டு தான் செல்ல வேண்டும்” என கூறினார்.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், “நாடாளுமன்ற தேர்தல் குறித்து தேர்தல் நெருங்கும் நேரத்தில் எங்களுடைய நிலைப்பாட்டை தெரிவிப்போம். தேமுதிகவிற்கு எந்த தொய்வும் கிடையாது. தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறோம். தேமுதிக முன்பை விட ஆரோக்கியமாக இருக்கிறது. பார்க்கின்றவர்கள் கண்கள்தான் வேறு மாதிரி இருக்கிறது. விஜயகாந்த் ஆரம்பித்த கட்சி, நல்ல நிலைமைக்கு வரும்.
‘சென்னையை பொறுத்தவரை எங்களுக்கு சிங்கார சென்னை, சிங்கப்பூர் சென்னை எல்லாம் வேண்டாம் முதல்வரே; எங்களுக்கு சிறப்பான சாலையுள்ள சென்னையை தாருங்கள்’ என மக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறேன். சென்னையில் இருக்கும் சாலைகளில் பயணம் செய்து, வாகனங்கள் பழுதாகி மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். விரைவில் இதை சரிசெய்ய வேண்டும், இல்லை என்றால் மாநகராட்சி முன்பு தேமுதிமுக சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்துவோம்” என கூறினார்.
இதையும் படிங்க: எட்டப்பர்களுக்கு அதிமுகவில் இடம் இல்லை - எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்