சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் நல்ல உடல் நலத்துடன் உள்ளார் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, சென்னை சாலிகிராமத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது,"தேமுதிக தலைவர் விஜயகாந்த், தற்போது நல்ல உடல்நலத்துடன் உள்ளார். அவருக்கு எப்படி தொற்று ஏற்பட்டது என்றே தெரியவில்லை. அவருக்கு கரோனா அறிகுறிகள் சிறியளவில் இருந்ததால்தான் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர் ஓரிரு நாள்களில் வீடு திரும்புவார் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மருத்துவ அறிக்கைக்கும், நாங்கள் வெளியிட்ட அறிக்கைக்கும் எவ்வித முரண்பாடும் இல்லை. அடுத்த வாரம் முதல் தன்னுடைய வழக்கமான பணிகளை விஜயகாந்த் தொடங்குவார். மாநகராட்சி அலுவலர்களின் பணியை நாங்கள் தடுக்கவில்லை. விதிமுறைகளை நாங்கள் தான் முதலில் பின்பற்றுவோம்.
நோட்டீஸ் ஒட்ட வந்த மாநகராட்சி ஊழியர்களுடன் எவ்வித வாக்குவாதத்திலும் நாங்கள் ஈடுபடவில்லை. தமிழ்நாடு அரசின் அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றுவோம். நோட்டீஸ் ஒட்டக்கூடாது என்று யாரும் சொல்லவில்லை. வீடு திரும்பியதும், விஜயகாந்த் ஆன்லைன் மூலம் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட நிர்வாகிகளையும் தொடர்பு கொண்டு பேசுவார்.
சட்டப்பேரவை தேர்தலுக்கான அடுத்தக்கட்ட பணிகளை தொடங்கவுள்ளோம். அவ்வவ்போது தேர்தல் பணிகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். தேர்தலில் கூட்டணி உள்ளிட்ட மற்ற விஷயங்கள் தொடர்பாக, டிசம்பர் அல்லது ஜனவரியில் கட்சியின் செயற்குழு, பொதுக்குழு கூடி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும்.
ஊடகங்கள் தேவையின்றி வீட்டின் முன்பு காத்திருக்க வேண்டாம். எந்தவொரு அறிவிப்பு என்றாலும் அனைவருக்கும் உரிய நேரத்தில் தெரிவிப்போம். தேவையின்றி காத்திருப்பதால், இப்பகுதியில் வசிக்கும் மற்றவர்களுக்கும், எங்களுக்கும் ஒருவித தர்மசங்கடமான நிலையை ஏற்படுத்துகிறது என்றார்.