தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் ஜூன் 23ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில், தபால் வாக்குக்கான வாக்குச் சீட்டுகள் கடந்த இரண்டு நாட்களாக வெளி மாவட்டங்களுக்கும் வெளியூர்களுக்கும் அனுப்பப்பட்டது.
நடிகர் சங்கத் தேர்தலில் வாக்களிக்கும் வாக்காளர்கள் தபால் வாக்குச்சீட்டு மூலம் அவர்கள் வாக்கைப் பதிவு செய்து இன்று (ஜூன் 18) மாலை முதல் தேர்தல் அலுவலகத்திற்கு வாக்குச்சீட்டுகளை அனுப்பி வைக்கலாம்.
ஜூன் 22ஆம் தேதி மாலை 5 மணியோடு தபால் வாக்குகள் அனுப்பும் நேரம் நிறைவு பெறுகிறது. தபால் வாக்கு சேகரிக்க தபால் வாக்குப்பெட்டி இன்று (ஜூன் 18) ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் முன்னிலையில் பூட்டி சீல் வைக்கப்பட்டது.
மேலும் தேர்தல் நடைபெறும் வாக்குச் சாவடிகளில் ஏழு வாக்குப் பெட்டிகள் வைக்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.