சென்னை: காத்திருப்போர் பட்டியலில் இருந்த 13 காவல்துறை அலுவலர்கள் உட்பட 15 அலுவலர்களுக்கு பணியிடம் ஒதுக்கி தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
திமுக ஆட்சி அமைத்தவுடன் தமிழ்நாடு காவல்துறையில் ஐபிஎஸ் அலுவலர்கள் உட்பட பல காவல்துறையினர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது காத்திருப்போர் பட்டியலில் இருந்த முன்னாள் சென்னை காவல் ஆணையர், முன்னாள் முதலமைச்சருக்கு பாதுகாப்பு அலுவலராக இருந்த எஸ்.பிக்கள் உட்பட 15 காவல் அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவை பிறப்பித்தது.
அதில், சிபிசிஐடி டிஜிபியாக இருந்து பின்னர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டிருந்த பிரதீப் வி பிலீப், தமிழ்நாடு போலீஸ் அகாடமியின் டிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார். டிஜிபி அந்தஸ்தில் உள்ள பிரதீப் பி பிலிப் இன்னும் ஒரு மாதத்தில் ஓய்வு பெற உள்ளதால் காத்திருப்போர் பட்டியலில் வைத்திருந்த நிலையில், தற்போது பொறுப்பு வழங்கியுள்ளனர்.
அதே போல முன்னாள் சென்னை காவல் ஆணையராக இருந்து காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட மகேஷ் குமார் அகர்வால், குற்றப்பிரிவு ஏடிஜிபியாகவும், சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக இருந்த ஜெயந்த் முரளி ஆயுதப்படை ஏடிஜிபியாகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பாதுகாப்பு பிரிவு பொறுப்பில் இருந்து வந்த எஸ்.பியான ராஜா, சிபிசிஐடி வணிக புலனாய்வு குற்றப்பிரிவு எஸ்பியாகவும், சுரேஷ் குமாரை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றப்பிரிவு எஸ்பியாகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை தெற்கு மண்டல ஏடிஜிபியாக இருந்த ஆபாஷ் குமார் பொருளாதார குற்றப்பிரிவு ஏடிஜிபியாகவும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஐஜி தினகரன் பொருளாதார குற்றப்பிரிவு ஐஜியாகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.