சென்னை: காவல் பணியில் வீரமரணம் அடைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஆண்டுதோறும் அக்டோபர் 21ஆம் நாள் காவலர் வீர வணக்க நாளாக அனுசரிக்கப்படும்.
இது இந்தாண்டு முதல் காவலர் கொடி நாளாக நாடெங்கும் அனுசரிக்கப்பட உள்ளது . அதன் தொடக்கமாக, சென்னை தலைமைச் செயலகத்தில், காவலர் கொடி நாள் கொடியினை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு காவல்துறை தலைமை இயக்குநர் திரிபாதி அணிவித்தார்.
இந்நிகழ்வின்போது, தலைமைச் செயலாளர் சண்முகம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் தலைமைச் செயலர் எஸ்.கே. பிரபாகர், காவல்துறை கூடுதல் இயக்குநர் ( நலப்பணி ) பி. தாமரைக்கண்ணன், காவல்துறை உயர் அலுவலர்கள் உடனிருந்தனர் .
பின்னர், தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற மற்றொரு நிகழ்வில், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பணிக்காலத்தில் காலமான காவலர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் வாரிசுதாரர்கள் 10 பேருக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார். இவை ஆயிரத்து 562 நபர்களுக்கு கருணை அடிப்படையில் தகவல் பதிவு உதவியாளர் பணியிடங்களுக்கான பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக வழங்கப்பட்டது.