சென்னை அடையாறு பகுதியைச் சேர்ந்தவர் குமரன்(52). இவர் திருவான்மியூர் பகுதியில் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் கடை வைத்துள்ளார். கடந்த மூன்றாம் தேதி இவரது கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டு, 5 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் செல்போன் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டது.
திருவான்மியூர் காவல் நிலையத்தில் இது தொடர்பாக குமரன் புகார் அளித்துள்ளார். இதேபோல், திருவான்மியூரைச் சேர்ந்த திவ்யா என்பவர் 28ஆம் தேதி தனது வீட்டில் இருந்து வெளியே சென்றுவிட்டு திரும்பியபோது, மூன்று தங்க மோதிரங்கள், இரண்டரை சவரன் நகை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் ரொக்கம் உள்ளிட்டவை வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.
இது தொடர்பாக திருவான்மியூர் காவல் துறையினர் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும், அப்பகுதியிலுள்ள 150 சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து இந்த கொள்ளையில் ஈடுபட்ட காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கத்தைச் சேர்ந்த கார்த்திக் (23) என்பவரை கைது செய்தனர்.
இதையும் படிங்க: தேனீர் கடையில் மர்மநபர் பணம் திருடும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு.!
பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில், பெற்றோர் இறந்துவிட்டதால் பிளாட்பாரத்தில் தங்கி நோட்டமிட்டு கடை மற்றும் வீடுகளில் கொள்ளையடிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளது தெரியவந்தது. அந்த பணத்தில் அவர் உல்லாசமாக இருந்து வந்ததும் தெரியவந்துள்ளது. பின்னர் கொள்ளையடித்த பணம் மற்றும் நகையை இவரிடமிருந்து பறிமுதல் செய்த காவல் துறையினர், அவரை சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: பிரபல நகைக்கடை உரிமையாளர் வீட்டில் திருட்டு: 3 தனிப்படை அமைத்த காவல் துறை!