சென்னை திருமங்கலம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக காவல் நிலையத்தில் அடுக்கடுக்காக புகார்கள் வந்துகொண்டே இருந்தன. இதையடுத்து, திருமங்கலம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில் தனிப்படை அமைத்து மாறுவேடத்தில் சுற்றிவந்தனர். அதனைத் தொடர்ந்து, பாடி குப்பத்தில் இளைஞர் ஒருவர் போதை பொருள் விற்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் அங்கு சந்தேகத்திற்குரிய வகையில் நின்றிருந்த ஒருவரை பிடித்து விசாரித்ததில் அவருடைய பேன்ட் பாக்கெட்டில் கஞ்சா பொட்டலம் இருந்தது. இது குறித்து அவரிடம் விசாரித்தபோது, போன் செய்தால் இரு சக்கர வாகனத்தில் ஒரு இளைஞர் வந்து ஒரு பொட்டலம் கஞ்சா 200 ரூபாய் என்று விற்பனை செய்துவிட்டு செல்வார் என்று கூறினார்.
காவல்துறையினர், அந்த நபரை வைத்து போன் செய்து 10 பாக்கெட் போதை பொருள் வேண்டும் என்று பேசியுள்ளனர். அதற்கு நெற்குன்றம் வாங்க தருகிறேன் என்று அந்த கஞ்சா விற்பனையாளர் சொல்லியுள்ளார். இதையடுத்து அங்கு விரைந்த உதவி ஆய்வாளர் யுவராஜ் மறைவாக நின்று கொண்டிருந்தார். அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞரை சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர்.
பின்னர், அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்ததில் பூந்தமல்லி காட்டுப்பாக்கம் ராமதாஸ் நகரைச் சேர்ந்தவர் ஆனந்தமூர்த்தி(38) எனவும் ஆந்திராவில் இருந்து 100 ரூபாய்க்கு வாங்கி வந்து 200 ரூபாய்க்கு விற்பதும் தெரியவந்தது. அவரிடமிருந்து, 60 பாக்கெட் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அதனை தொடர்ந்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மேலும் அவர் மீது எற்கனவே அடிதடி, போதை பொருள் உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடதக்கது.