சென்னை: பாதயாத்திரையின் மூலம் மக்கள் மத்தியில் ஆதரவு அதிகரிக்கும் என்பது அரசியல்வாதிகளின் கணிப்பாக இருக்கிறது. கடந்த காலங்களில் பாதயாத்திரை மூலம் ஆட்சியைப் பிடித்த வரலாறும் உண்டு. சமீபத்தில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நாடு முழுவதும் 'பாரத் ஜோடோ'என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டார்.
தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் தொடங்கிய இப்பயணம், பல்வேறு மாநிலங்கள் வழியாக சென்று ஜம்மு-காஷ்மீரில் நிறைவடைந்தது. இதில் ராகுல் காந்திக்கு ஆதரவாக காங்கிரஸ் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதன் எதிரொலியாகவே, கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதாக கூறப்படுகிறது. மேலும் ராகுல்காந்திக்கு முன்பைவிட செல்வாக்கு அதிகரித்திருப்பதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் 'என் மண்; என் மக்கள்' என்ற பெயரில், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, திருச்செந்தூரில் இருந்து ஜூலை 9ம் தேதி நடைபயணத்தை தொடங்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் முதல் சென்னை வரை உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளிலும், ஒரு நாளைக்கு 2 சட்டமன்றத் தொகுதிகள் வீதம் 100 நாட்கள் நடைபயணம் செல்ல திட்டம் வகுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ஒருசில இடங்களில் வாகனங்கள் மூலம் அண்ணாமலை பயணம் செய்யுவும் திட்டமிடப்பட்டுள்ளது.
'திமுக ஃபைல்ஸ்' என்ற தலைப்பில் அக்கட்சியினருடைய சொத்துப்பட்டியலை கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி அண்ணாமலை வெளியிட்டார். அதில் முதலமைச்சர் ஸ்டாலின், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி, திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்டோரின் சொத்து விவரங்களை குறிப்பிட்டிருந்தார். தனது நடைபயணம் முடிந்த பிறகு, 'திமுக ஃபைல்ஸ்-2' என்ற பெயரில், திமுகவைச் சேர்ந்த 21 பேரின் சொத்துப்பட்டியல் வெளியிடப்படும் என அண்ணாமலை அறிவித்துள்ளார்.
கர்நாடகா சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, 10 மாவட்டங்களில் உள்ள 85 தொகுதிகளுக்கு அண்ணாமலை இணை பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டிருந்தார். இதில் 85 தொகுதிகளில் பாஜக 33 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது. இதனால் அண்ணாமலையின் செல்வாக்கு டெல்லியில் குறையும் என்று கூறப்பட்ட நிலையில், திமுகவிற்கு எதிராக பல திட்டங்களை அவர் முன்னெடுத்து வருகிறார். தமிழ்நாடு முழுவதும் பாதயாத்திரை மேற்கொண்டு தனது செல்வாக்கை அதிகரிக்க அவர் முயற்சி செய்வதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைக்கும் அண்ணாமலை, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், பாஜகவுக்கு ஆதரவு திரட்டும் பணியில் தீவிரம் காட்டி வருகிறார்.
அவரது பாதயாத்திரை திட்டம் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு வலுசேர்க்கும் எனவும், கூட்டணியைப் பொறுத்தே பாஜகவிற்கான வளர்ச்சி இருப்பதாகவும் அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். ஏப்ரல் 14ம் தேதி அண்ணாமலை நடைபயணத்தை தொடங்க திட்டமிட்டிருந்த நிலையில், கர்நாடகத் தேர்தல் பொறுப்பாளராக அவர் நியமிக்கப்பட்டதால் ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நாளை சிங்கப்பூர் செல்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்!