சென்னை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், கடந்த 2 வாரமாக நாடாளுமன்றம் முடங்கி கிடக்கிறது. மக்களவை, மாநிலங்களவை ஒரு நாள் கூட நடைபெறவில்லை. ஆளும் கட்சியின் பிடிவாதத்தால் ஒட்டுமொத்தமாக இரு அவைகளும் முடங்கி கிடக்கின்றன. இந்தியாவின் மதிப்பை குறைக்கின்ற வகையில் ராகுல் காந்தி பேசி விட்டதாக ஆளும் கட்சியை சேர்ந்த பாஜகவினர் கூச்சல் எழுப்பி, குழப்பம் செய்து அவையை ஒத்தி வைத்தனர்.
இதன் உச்ச நிலையில் ராகுல் காந்தியை பழிவாங்கும் நோக்கில் அவரது பதவியை தகுதி நீக்கம் செய்து உள்ளனர். தேர்தல் காலத்தில் பெங்களூருவின் கோலார் பகுதியில் பிரச்சாரத்தில் பேசிய பேச்சு குறிப்பிட்ட சமூகத்தை இழிவுப்படுத்துவதாக குஜராத்தில் தொடர்ந்த வழக்கில் 2 ஆண்டுகள் தண்டனை வழங்கி உள்ளார்கள். இது திட்டமிட்ட அரசியல் சதி. பாஜகவின் அற்பமான சதி என்பதை உணர முடிகிறது. ராகுல் காந்தியை ஒரு அவதூறு வழக்கில் தண்டித்து நாடாளுமன்றத்தில் ஒராண்டுக்கு தடுக்கிற கீழ்தரமான செயலில் பாஜக அரசு, மோடி அரசு செயல்பட்டு உள்ளது.
பாஜகவின் உண்மை முகத்தை நாட்டு மக்கள் இன்று உணர்ந்து கொள்வார்கள். அந்த வழக்கில் தீர்ப்பு அளிப்பதாக இருந்த நீதிபதியை மாற்றி தங்களுக்கு எதுவாக அமையக்கூடிய ஆர்.எஸ்.எஸ். மன நிலையில் உள்ள ஒரு நீதிபதியை அமர்த்தி தங்கள் விருப்பம் போல் தீர்ப்பை வழங்க வைத்து இருக்கிறார்கள். இந்த போக்கு வன்மையாக கண்டனத்துக்கு உரியது. இதனால் காங்கிரஸ் கட்சிக்கோ ராகுல் காந்திக்கோ எந்த பின்னடைவும் ஏற்பட்டு விடாது. பா.ஜ.க.விற்கு தான் மக்கள் உரிய நேரத்தில் பாடம் புகட்டுவார்கள்.
எதிர்கட்சிகளை செயல்பட விடாமல் தடுப்பது, பிளவுப்படுத்துவது முலம் சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி பலவீனப்படுத்துவது எதிர்கட்சிகளே இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும் என்ற சதி வேலைகளில் பாஜக தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இந்த போக்கு மிக வன்மையாக கண்டனத்துக்குரியது. ஜனநாயகத்திற்கு புறம்பான நடவடிக்கை. எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகனங்கள் நிறுத்த கெடுபுடி