சென்னை தேனாம்பேட்டையில் 'நீட் அபாயம் நீங்கி விட்டதா?' என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் ஓய்வுபெற்ற நீதிபதி அரிபரந்தாமன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நூலை வெளியிட்டார்.
இந்த விழாவில் சிறப்புரையாற்றிய அவர், தனியார் கல்வியை ஒழிப்பதற்கும், நீட் ஒழிப்பிற்கும் தொடர்பு உள்ளது என்று தெரிவித்தார். பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமி நீட் கண்டிப்பாக இருக்கும் என்று ஆணவத்தோடு பேசுகிறார் என்று சாடினார்.
நுழைவுத் தேர்வுகள் அதிக பயிற்சி மையங்களுக்கு வழிவகுக்கும் என்றும், 17 வயது மாணவனுக்கு அதிக சுமையை நீட் தருவதாகவும் குறிப்பிட்டார். கல்வி தற்போது வியாபாரம் ஆகிக்கொண்டிருப்பதாகவும் வருத்தம் தெரிவித்தார்.
நீட்டை துரத்த மக்களால்தான் முடியும் என்றும், காங்கிரஸ் வந்தால்கூட வேறு பெயரில் நீட் தொடர்ந்துகொண்டு தான் இருக்கும் என்றும் தெரிவித்தார். காங்கிரஸ் 40 ஆண்டுகளில் செய்ததை தற்போதைய ஆட்சியாளர்கள் 5 ஆண்டுகளில் செய்துவிட்டதாகவும் சாடினார்.
அதிகார குவியலை தடுப்பதற்காகவே இங்கு இவ்வளவு போராட்டம் நடப்பதாகவும், நீட் தேர்வுக்கு பதிலாக மருத்துவம் படிக்க பிளஸ் 2 மதிபெண்ணை எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.