சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி, நாளை மறுநாள் (அக்டோபர் 22ஆம் தேதி) தனது 70ஆவது பிறந்த நாளை கொண்டாடவுள்ளார். இதனை பிரமாண்டமாக கொண்டாட காங்கிரஸ் நிர்வாகிகள் பலரும் பல்வேறு ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று (அக்.19) சென்னை சத்தியமூர்த்தி பவனில் கே.எஸ். அழகிரியின் புகைப்படம் ஒட்டப்பட்ட ராட்சத ஹீலியம் பலூனை, காங்கிரஸ் சட்டமன்றக் குழுத் தலைவர் செல்வப் பெருந்தகை பறக்கவிட்டார். பறக்கவிடப்பட்ட பலூனின் மதிப்பு ரூ.85 ஆயிரம் ஆகும்.
இதற்கு, காங்கிரஸ் மத்திய சென்னை மேற்கு மாவட்ட தலைவர் ரஞ்சன் குமார் ஏற்பாடு செய்திருந்தார். மேலும் சத்தியமூர்த்தி பவன் வளாகத்துக்குள்ளேயே ரஞ்சன் குமார், எம்எல்ஏ ரூபி மனோகரன், மாவட்ட செயலாளர்கள், முன்னாள் நிர்வாகிகள் சார்பாக 15 பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
2 ஆயிரம் நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள்
நிகழ்ச்சியைத் தொடர்ந்து செல்வப் பெருந்தகை பேசுகையில், "கே.எஸ். அழகிரியின் 70ஆவது பிறந்த நாள் விழாவையொட்டி ராட்சத கேஸ் பலூன் பறக்க விடப்பட்டுள்ளது.
அவரது பிறந்த நாளன்று, 2 ஆயிரம் நபர்களுக்கு உணவு, தையல் இயந்திரங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும். எழுபதாவது பிறந்த தினத்தைக் குறிக்கும் வகையில் 70 கிலோ கேக் வெட்டப்படும்" என்றார்.
காங்கிரஸ் கட்சியில் கவனத்தைப் பெறவும், தேர்தல் நேரத்தில் போட்டியிட வாய்ப்புகளைப் பெறவும் தலைவர்களின் பிறந்தநாளை பிரம்மாண்டமாக கொண்டாடுவது வழக்கமானது என்று கூறப்படுகிறது. இருப்பினும் இந்த முறை வழக்கத்தைவிட கூடுதலாக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பது பேசு பொருளாகியுள்ளது.
விமர்சனத்தைக் கிளப்பிய பலூன் செலவு
பொதுவாக ராகுல், சோனியா காந்தி பொன்றோரின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் கூட இந்தளவு விமரிசையாக கொண்டாடப்பட்டது கிடையாது.
கரோனா காலத்தில், அனைவரும் பொருளாதார நெருக்கடியில் தவித்துவரும் நிலையில், பிறந்தநாள் விழா கொண்டாட்டத்துக்காக ரூ. 85 ஆயிரம் செலவில் ராட்சத ஹீலியம் பலூன் பறக்கவிடப்பட்டது கட்சித் தொண்டர்களிடையே அதிருப்தியையும், விமர்சனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பம்பு செட் விவசாயிகள் பாதிப்பு.. டீசல் விலையை குறைத்திடுக.. மு.க. ஸ்டாலினுக்கு ஓ.பி.எஸ் வலியுறுத்தல்!