சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் கடந்த 13ஆம் தேதி சத்யா என்ற தனியார் கல்லூரி மாணவி சதீஷ் என்ற இளைஞரால் ரயில் முன் தள்ளிவிடப்பட்டு கொலை செய்யப்பட்டார். இக்கொலை வழக்குத்தொடர்பாக சதீஷ் என்ற இளைஞரை போலீசார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.
மாணவி சத்யா கொல்லப்பட்ட நிலையில் மகள் இறந்த சோகத்தில் கடந்த 14ஆம் தேதி சத்யாவின் தந்தை மாணிக்கமும் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டார். மாணவி சத்யா தன்னைக்காதலிக்க மறுத்து, வேறொரு நபருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது தெரியவந்ததால் ஆத்திரத்தில் கொலை செய்துவிட்டுத்தானும் தற்கொலை செய்துகொள்ள திட்டமிட்டதாகவும், மக்கள் கூடியதால் தப்பியோடியதாகவும் கைதான சதீஷ் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்திருந்தார்.
பின்னர் சத்யா கொலை வழக்கு விசாரணையை சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி சைலேந்திர பாபு கடந்த 14ஆம் தேதி உத்தரவிட்டார். இவ்வழக்கு விசாரணைக்காக சிபிசிஐடி டிஎஸ்பி செல்வகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, விசாரணை அலுவலராக சிபிசிஐடி காவல் ஆய்வாளர் ரம்யா நியமிக்கப்பட்டுள்ளார்.
காணொலி காட்சி மூலம் விசாரணை: இந்நிலையில் கொலையாளி சதீஷை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் கடந்த வாரம் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மீதான விசாரணை இன்று விசாரணைக்கு வந்த நிலையில், கடந்த முறை சதீஷை நீதிமன்றத்துக்கு அழைத்து வந்தபோது வழக்கறிஞர்கள் தாக்க முயன்ற சம்பவம் காரணமாகப் பாதுகாப்புக்கருதி, நீதிமன்ற விசாரணை காணொலி காட்சி மூலம் நடைபெற்றது.
ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி: இந்நிலையில் மாணவி சத்யா கொலை வழக்குத்தொடர்பாக சிபிசிஐடி போலீசார் கொலையாளி சதீஷை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரிய நிலையில், ஒரு நாள் மட்டுமே காவல் வழங்கி சைதாப்பேட்டை நீதிமன்ற நடுவர் மோகனாம்பாள் உத்தரவிட்டுள்ளார். ஏற்கெனவே கடந்த 15ஆம் தேதி சம்பவ இடமான பரங்கிமலை ரயில் நிலையத்தில் சிபிசிஐடி தனிப்படை போலீசார் முதற்கட்ட விசாரணையை நடத்தி தடயங்களை சேகரித்ததுடன், வழக்குத்தொடர்பான ஆவணங்களையும் ரயில்வே போலீசாரிடம் இருந்துபெற்றனர்.
பின்னர் கொல்லப்பட்ட மாணவி சத்யாவின் தாயார் ராமலட்சுமி மற்றும் அவரது குடும்பத்தினரிடமும், அன்றையதினம் ரயிலை ஓட்டி வந்த ரயில் ஓட்டுநர் கோபால் என்பவரிடமும் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். இந்நிலையில் கொலையாளி சதீஷை நாளை ஒரு நாள் காவலில் எடுத்து சிபிசிஐடி போலீசார் விசாரித்துப்பின் மறுநாள் காலை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளனர்.
இதையும் படிங்க: விஷவாயு தாக்கி உயிரிழந்த விவகாரம் - வாரிசுதாரர்களுக்கு இழப்பீட்டுத்தொகை வழங்கல்