திருவல்லிக்கேணி - சேப்பாக்கம் சட்டப்பேரவைத்தொகுதி திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் கரோனாவால் பாதிக்கப்பட்டு குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த பத்து நாள்களாக அன்பழகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்தியாவில் கரோனாவுக்கு பலியான முதல் எம்எல்ஏ என்கின்ற சோக செய்தியால் திமுக தொண்டர்கள் கவலையில் உள்ள நிலையில், அவரது மறைவுக்கு முதலமைச்சர் பழனிசாமி, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் அவருக்கு இரங்கல் தெரிவித்து பதிவிட்டுள்ளார். அதில், "திமுக எம்எல்ஏ மற்றும் மாவட்டச் செயலாளர் ஜெ. அன்பழகன் மறைவுக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது இடையறாது தொண்டாற்றிய ஒரு போர் வீரனின் அகால மரணம். அவருடைய குடும்பத்திற்கும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் என் அனுதாபங்கள்" எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: புதுக்கோட்டையில் கரோனா பாதிப்பிலிருந்து மீண்ட 27 பேர்!