சென்னை: தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டலத்தின் கீழடுக்கு கிழக்கு திசை காற்றும் மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவி வருவதால் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.
இந்நிலையில் தமிழகத்தில் பல பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் கோடையின் உஷ்ணத்தில் இருந்து மக்கள் சற்று விடுபட்டு நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். சென்னையிலும் 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் நேற்று இரவில் இருந்து பெய்த கனமழையால் முக்கிய சாலைகளில் மழை நீர் கரைபுரண்டு ஓடியது.
சென்னையில் அண்ணாசாலை, சேப்பாக்கம், மெரினா, பட்டினம்பாக்கம், ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, கிண்டி, அடையாறு, திருவான்மியூர், ஈக்காட்டுத்தாங்கல், தி.நகர், கோடம்பாக்கம், சூளைமேடு, உள்ளிட்ட இடங்களில் நேற்று இரவு மழை கொட்டி தீர்த்தது. இதனால் ஒரு சில இடங்களில் சாலையோரம் மழைநீர் தேங்கி நின்றது. மேலும் ஒரு சில பகுதிகளில் சாலையில் உள்ள மின் விளக்குகளும் துண்டிக்கப்பட்டது.
குறிப்பாக அண்ணா சாலை, ஜி.பி சாலையில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிப்பட்டனர். பெரிய இயந்திரங்கனை வைத்து மழைநீரை அப்புறப்படுத்தும் பணிகளில் மாநகராட்சி ஈடுபட்டு வருகிறது. மேலும் இதுகுறித்து சென்னை மாநகராட்சியின் சமூக வலைதள பக்கத்தில், “அண்ணாசாலையில் நெடுஞ்சாலை பணிகளால் ஏற்பட்ட அடைப்புகளினால் மழைநீர் வெளியேறுவதில் தடை ஏற்பட்டுள்ளது. அதை இயந்திரங்களை கொண்டு அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாலைகளில் மழை நீர் தேங்குவதை கண்டறிந்து உடனடியாக சென்னை மாநகராட்சி நடவடிக்கை எப்பதை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். மேலும், தமிழகத்தில் நான்கு நாட்கள் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில் இன்று காலை முதலே சென்னையில் வானம் மேகம் மூட்டத்துடன் காணப்பட்டு வருகிறது.