சென்னை: கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கத் தேவையான ஆக்சிஜன் அளவில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் தூத்துகுடியில் மூடப்பட்டுள்ள வேதாந்தா நிறுவனத்திற்குச் சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையை திறந்து ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதி வேண்டி அந்நிறுவனம் உச்ச நீதிமன்றத்தை நாடியது.
இந்த விவகாரம் தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் திமுக, பாமக, தேமுதிக, பாஜக உள்ளிட்ட எட்டு கட்சிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட திமுக, பாஜக ஆகிய கட்சிகள் ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
கூட்டத்தில் பங்கேற்றபின் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக எம்பி கனிமொழி, "தமிழ்நாட்டில் வரும் நாள்களில் கரோனா பாதிப்புகள் அதிகரிக்கும்போது, ஆக்சிஜன் தேவையான அளவு கையிருப்பு இருக்க வேண்டும்.
இதனைக் கருத்தில்கொண்டு எல்லா வகையிலும் ஆக்சிஜன் உற்பத்தி நடக்க வேண்டும் என்பதால், ஸ்டெர்லைட் ஆலை ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கு மட்டும் திறக்கப்பட வேண்டும்.
இங்கு ஆக்சிஜன் உற்பத்திக்கு மட்டும் மின்சாரம் வழங்க வேண்டும். ஆலையின் பிற பகுதிகளை எக்காரணம் கொண்டும் இயக்கக் கூடாது. இதனைக் கண்காணிக்க தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தலைமையின்கீழ் குழு அமைக்க வேண்டும்.
அவர்களின் கண்காணிப்பின் கீழே ஆக்சிஜன் தயாரிப்பு நடக்க வேண்டும். அதுமட்டுமின்றி, தமிழ்நாட்டின் தேவை நிறைவேறிய பின்னரே, பிற மாநிலங்களுக்கு ஆக்சிஜன் வழங்க வேண்டும்" என்றார்.