சென்னை: அதிமுகவில் ஒற்றைத் தலைமைக்கான யுத்தத்தில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் அணியினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். பொதுக்குழு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் போட்டி பொதுக்குழு கூட்டுவதற்கான முயற்சியில் ஓபிஎஸ் அணி தீவிரம் காட்டி வருகின்றனர்.
தமிழ்நாடு முழுவதும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் 80 சதவீதம் புதிய நிர்வாகிகளை ஓபிஎஸ் அணியினர் நியமனம் செய்துள்ளனர். பாஜகவின் ஆதரவும் ஓபிஎஸ்-க்கு இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு டிச.21ஆம் தேதி மாவட்டச் செயலாளர் கூட்டம் என ஓ.பன்னீர்செல்வம் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி அணியினர், 'டிச.27ஆம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும்' என அறிவித்து இருக்கின்றனர்.
மாவட்டச்செயலாளர் கூட்டம் குறித்து எடப்பாடி பழனிசாமி அணியினரிடம் விசாரிக்கும்போது, "அதிமுகவில் ஓ.பன்னீர் செல்வம் அணியினரை சேர்க்க முடியாது என்ற முடிவில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருக்கிறார். வரும் ஜன.4ஆம் தேதி வரக்கூடிய பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு எங்கள் தரப்பிற்கு சாதகமாக வரும் என எதிர்பார்கிறோம். அதற்கு அடுத்த நடவடிக்கை குறித்து கூட்டத்தில் விவாதிக்க இருக்கிறோம்.
நாடாளுமன்றத் தேர்தல் குறித்தும், ஓ.பன்னீர்செல்வம் அணியினரை எதிர்கொள்வது குறித்தும் விவாதிக்க இருக்கிறோம்" எனக் கூறினர்.
மேலும், எடப்பாடி பழனிசாமி தரப்பில் மற்றொரு தரப்பிடம் விசாரிக்கும் போது, "நிர்வாகிகளே இல்லாத ஓ.பன்னீர் செல்வம், மாவட்டச் செயலாளர் கூட்டம் கூட்டுகிறார். நம்மிடம் 90 சதவீதம் நிர்வாகிகள் இருக்கின்றனர். அதிமுகவின் தலைமை அலுவலக சாவி நம்மிடம் இருக்கிறது. ஓ.பன்னீர் செல்வம் அணியை எதிர்ப்பதற்கு நாமும் மாவட்டச் செயலாளர் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்" என எடப்பாடி பழனிசாமியிடம் சில மூத்த நிர்வாகிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தற்போது உள்ள சூழ்நிலையில் அனைத்து பிரச்னைகள் குறித்தும் விவாதம் செய்வதற்கு ஏதுவாக இருக்கும் என மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்கு எடப்பாடி பழனிசாமி ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க:தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்திற்கு இரண்டு உறுப்பினர்கள் நியமனம்!