சென்னை: தமிழ்நாட்டில் கரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தநிலையில், கல்லூரி இறுதியாண்டு மாணவர்கள் தவிர்த்து மற்ற ஆண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் வழி தேர்வு நடத்தப்படும் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.
அதன்படி வினாத்தாள் மாணவர்களின் வாட்ஸ் அப் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கப்படும். தேர்வு முடிந்தபின் மாணவர்கள் தேர்வெழுதிய விடைத்தாள்களை வாட்ஸ்அப் மற்றும் மின்னஞ்சல் மூலமாக சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்கு அனுப்ப வேண்டும்.
இதனையடுத்து, மாணவர்கள் நேரடியாக எழுதிய விடைத்தாள்களை கல்லூரிகளுக்கு அஞ்சல் மற்றும் கூரியர் வாயிலாக அனுப்பி வைக்க வேண்டும். மாணவர்கள் அனுப்பி வைக்கும் விடைத்தாள்களும் வாட்ஸ்அப் மற்றும் மின்னஞ்சல் மூலமாக அனுப்பிய விடைத்தாள்களும் ஒரே மாதிரியாக இருந்தால் மட்டுமே விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்படும் என உயர்கல்வித்துறை புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஆன்லைன் தேர்வின்போது மாணவர்கள், முறையாக தேர்வுக்குரிய விடைத்தாள்களை அனுப்பாததன் காரணமாகவும், முறைகேடுகளில் ஈடுபட்டதன் காரணமாகவும் தற்போது இந்த புதிய முறையை உயர்கல்வித்துறை மேற்கொண்டுள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாடு, புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை