சென்னை: கெல்லீஸ் சாலை வழியாக கடந்த 18ஆம் தேதி விக்னேஷ் மற்றும் அவரது நண்பர் சுரேஷ் ஆகியோர் ஆட்டோவில் வந்து கொண்டிருந்த போது, கஞ்சா மற்றும் பட்டாக்கத்தி வைத்திருந்ததாக காவல்துறையினர் வழி மறித்து இருவரையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரையும் தலைமை காலனி காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வந்த போது திடீரென விக்னேஷிற்கு வலிப்பு ஏற்பட்டு இறந்துவிட்டதாகக் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.
காவல்துறை மீது சந்தேகம்: மேலும், விக்னேஷ் குடிபோதையில் காவல்துறையினரிடம் கத்தியைக் காட்டி மிரட்டியதாகவும், ஏற்கனவே முகத்தில் சிராய்ப்பு காயங்கள் இருந்ததாகவும் காவல்துறை தரப்பில் கூறப்பட்டது பல்வேறு சந்தேகங்களை கிளப்பியது.
இதனையடுத்து, விக்னேஷின் மரணத்தை மறைப்பதற்காகக் காவல்துறை விக்னேஷ் வேலை பார்க்கும் குதிரை உரிமையாளர் மூலமாக ரூ.1 லட்சம் வழங்கியதாக விக்னேஷின் சகோதரர் வினோத் கூறியது பெரும் சர்ச்சைக்குள்ளானது.
இதில் திடீர் திருப்பமாக காவல்துறை சார்பில் விக்னேஷ் குடும்பத்தாருக்கு அளிக்கப்பட்டதாக கூறப்படும் ரூ.1 லட்சம் தன்னுடையது என குதிரை உரிமையாளர் ரஞ்சித் பிரேத்யேக பேட்டியில் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய ரஞ்சித், விக்னேஷ் கடந்த 9 வருடங்களாக தன்னிடம் குதிரை ஓட்டும் வேலை பார்த்து வந்ததாகவும், அவர் மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர் எனக் கூறியுள்ளார்.
அது என் பணம் தான்..!: மேலும், கரோனா காலத்தின் போது குற்றவழக்கில் விக்னேஷ் சிறைக்குச் சென்று விட்டு வெளியே வந்தாகத் தெரிவித்த அவர் கடந்த 19ஆம் தேதி காவல் நிலையத்தில் விக்னேஷ் இறந்துவிட்ட செய்தி அறிந்தவுடன், ஏழ்மையான குடும்பம் என்பதால் ஈம சடங்கு செய்ய பணமிருக்காது என எண்ணி தனது நண்பரிடம் கொடுத்து மருத்துவமனையில் இருந்த விக்னேஷின் சகோதரர் வினோத்திடம் ரூ.1லட்சம் கொடும்கும்படி கொடுத்து அனுப்பியதாகத் தெரிவித்துள்ளார்.
விக்னேஷ் மரணத்தை மறைக்க காவல்துறையினர் தரப்பில் ரூ.1லட்சம் வழங்கியதாகச் சொல்லப்படுவது முற்றிலும் தவறு என்றும் அந்த ரூ.1லட்சம் என்னுடைய பணம் எனக் கூறினார். இன்று விக்னேஷின் குடும்பத்தினர் எழும்பூர் நீதிமன்றத்தில் ரூ.1லட்சம் திரும்ப ஒப்படைப்பதற்காக வந்திருப்பதை அறிந்து அந்தப் பணத்தை வாங்க எழும்பூர் நீதிமன்றத்திற்குச் சென்றதாகக் கூறிய அவர், காவல்துறை மிரட்டலால் மாற்றி கூறவில்லை எனவும், அது என்னுடைய பணம் எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: இந்தியா என்றால் வர்த்தகம்... செமிகான் மாநாட்டில் பிரதமர் மோடி...