சென்னை: மாநிலக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் இன்று தொடங்கின. கல்லூரிக்கு வருகை புரிந்த மாணவர்களை கல்லூரி முதல்வர் ராமன் வரவேற்றார். அப்பொழுது மாணவர்களுக்கு சென்னை மாநில கல்லூரியின் வரலாறு மற்றும் வருங்காலத்தில் உள்ள வாய்ப்புகள் குறித்தும் எடுத்துக் கூறப்பட்டது.
தமிழ்நாட்டில் உள்ள 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 299 இடங்களில் சுமார் 85 ஆயிரம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இவர்களில் அரசுப் பள்ளிகளில் படித்த 23 ஆயிரத்து 295 மாணவிகள் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் சேர்ந்துள்ளனர். இவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட உள்ளது. மாணவர் சேராமல் காலியாக உள்ள இடங்களைக் கல்லூரிகளில் நேரடியாக ஏழாம் தேதி வரை நிரப்பிக்கொள்ளவும் உயர் கல்வித்துறை அனுமதி வழங்கி உள்ளது.
தற்போது சென்னை மாநிலக்கல்லூரியில் ஒரு இடத்திற்கு 106 மாணவர்கள் விண்ணப்பம் செய்திருந்தனர். கணிதப் பாடத்திற்குப் பிறகு கல்லூரியில் மாணவர்கள் சேரவில்லை என்ற நிலை இருந்தாலும் மாநிலக் கல்லூரியினைப் பொறுத்தவரையில் அவ்வாறு இல்லாமல் 58 இடங்களும் நிரம்பியுள்ளன.
இதையும் படிங்க :ஆபத்தை அறியாமல் அருவியில் ஆட்டம் போடும் இளைஞர்கள் - சமூக ஆர்வலர்கள் வருத்தம்
இதுகுறித்து ஈடிவி பாரத் ஊடகத்திற்கு சிறப்பு பேட்டி அளித்த கல்லூரி முதல்வர் ராமன் பேசுகையில், ’மாநிலக் கல்லூரியில் உள்ள அனைத்து இடங்களும் நிரப்பப்பட்டுள்ளன. மாணவர்களுக்கான உட்கட்டமைப்பு வசதிகள் தொடர்ந்து ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. மாநிலக் கல்லூரியில் தான் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படித்தார். தற்போது முதல்வராக உள்ளார். மேலும் நோபல் பரிசுபெற்ற அறிஞர்களும் இந்த கல்லூரியில் படித்துள்ளனர்.
தேசிய அளவிலான தரவரிசைப் பட்டியலில் மாநிலக் கல்லூரி தொடர்ந்து மூன்றாம் இடம் பெற்று வருகிறது. மாணவர்களுக்கு அவர்களின் திறமையினை வளர்க்கும் விதமாக விளையாட்டு போன்றவற்றிலும் ஆர்வத்தை ஏற்படுத்தி வருகிறோம்.
மேலும் மாநிலக் கல்லூரி மீது சமூகத்தில் இருக்கும் பெயரை மாற்றும் வகையில் ரூட் தல பிரச்னையைத் தீர்ப்பதற்காக பேருந்து மற்றும் ரயிலில் செல்லும் மாணவர்களின் தகவல் பெறப்பட்டு அவர்கள் தொடர்ந்து கல்லூரி பேராசிரியர்களாலும் காவல் துறையினராலும் கண்காணிக்கப்படுகின்றனர். இதற்காக குழு அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் குற்றச் செயல்களில் ஈடுபடும் மாணவர்களைக் கண்டறிந்து அவர்களுடைய பெற்றோர்களை அழைத்து அறிவுரை கூறி மாணவர்கள் தொடர்ந்து படிப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. மாணவர்களின் கல்வியுடன் போட்டித் தேர்வுகளுக்கும் தயாராகும் விதமாக, 'நான் முதல்வன்' திட்டத்தின் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் மாணவர்களின் திறன்களை வெளிக்கொண்டு வர பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் மாநிலக் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் சிறந்த மாணவர்கள் என்ற நற்பெயர் பெறுவார்கள்' என தெரிவித்தார்.
இதையும் படிங்க :Padma award 2024: பத்ம விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு... கடைசி தேதி என்ன தெரியுமா?