சென்னை: கிண்டி வளாகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கான புத்தாக்க அறிமுகப் பயிற்சி வகுப்பை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் தொடங்கிவைத்தார்.
பின்னர் அவர் பேசுகையில், 'மாணவர்கள் வாழ்வில் உயரிய லட்சியங்களைக் கொண்டிருக்க வேண்டும். மாணவர்கள் தவறான வழிகளுக்குச்செல்லாமல் நல்வழியில் செல்ல யோகா, தியானம் போன்றவற்றை மேற்கொள்ளவேண்டும். வாழ்வில் தான் நினைத்ததை அடைய தியானம், யோகா உதவியாக இருக்கிறது. எனவே, யோகா, தியானம் போன்றவற்றை மாணவர்கள் மேற்கொள்ள வேண்டும்' எனறார்.
தொடர்ந்து பேசுகையில், 'பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு நடப்பாண்டில் முதலாம் ஆண்டில் சேரக்கூடிய மாணவர்களுக்கு பல்கலைக்கழகம் புதிய வழிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. மெக்கானிக்கல் பயிலும் மாணவர்கள் தாங்கள் விரும்பினால் சிவில், கணினி அறிவியல் உள்ளிட்டப்படிப்புகளையும் படிக்க வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு விருப்ப பாடத்திற்கான தேர்வில் வெற்றி பெற்றால், அவர்களுக்கு பிராதான படிப்பிற்கான பட்டத்துடன் விருப்ப பாடத்தில் வெற்றி பெற்றதுக்கான மைனர் டிகிரி வழங்கப்படும்' எனத் தெரிவித்தார்.
மேலும், 'அண்ணா பல்கலைக்கழகத்தில் சேரக்கூடிய மாணவர்கள் பொருளாதாரச் சிக்கல் காரணமாக கல்வி பாதிக்கப்படுவதைத் தவிர்க்கும் வகையில் கல்விக்கட்டணம், விடுதிக்கட்டணம், தேர்வுக்கட்டணம் ஆகியவற்றை செலுத்த இயலாத மாணவர்களுக்கு முன்னாள் மாணவர்கள், தனியார் நிறுவனங்களின் மூலம் கட்டணம் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும்' எனக் கூறினார்.