சென்னை: மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான 20 விழுக்காடு இட ஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கி முந்தைய ஆட்சியில் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
இந்த சட்டத்தை எதிர்த்து பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு சில மணி நேரம் முன்பு, அரசியல் லாபத்துக்காக சட்டம் இயற்றப்பட்டதாக அந்த மனுக்களில் குற்றம்சாட்டப்பட்டுள்ளன. மக்கள் தொகை விகிதத்தின் அடிப்படையில் வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதாக தமிழ்நாடு அரசுத்தரப்பில் பதிலளிக்கப்பட்டது.
இந்த வழக்குகளின் விசாரணையில் இருந்து விலகுவதாக நீதிபதி ஆதிகேசவலு அறிவித்தார். இதையடுத்து புதிய அமர்வு, இவ்வழக்குகளை விசாரிக்கும் என தலைமை நீதிபதி அறிவித்திருந்தார்.
அதன்படி, வன்னியர் இட ஒதுக்கீட்டை எதிர்த்த வழக்குகளை விசாரிக்க நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ் மற்றும் கண்ணம்மாள் அமர்வு அமைக்கப்பட்டுள்ளது. நீதிபதி சுந்தரேஷ் தலைமையிலான இந்த புதிய அமர்வில், இந்த வழக்குகள் நாளை (ஆகஸ்ட் 24) விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: நித்யானந்தா வழியில் சிவசங்கர் பாபா குபீர் வாக்குமூலம்?