2018-19ஆம் ஆண்டு சிபிஎஸ்இயால் நடத்தப்பட்ட நீட் தேர்வில் முறைகேடு செய்து அதன் மூலம் மருத்துவ படிப்பு படித்து வந்த கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரைச் சேர்ந்த மாணவர் தனுஷ்குமார் மற்றும் அவருடைய தந்தை தேவேந்திரன் ஆகிய இருவரும் சிபிசிஐடி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
மெட்ராஸ் மருத்துவ கல்லூரியின் முதல்வர் ஜெயந்தி அளித்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேர்வை நடத்திய சிபிஎஸ்இ அதிகாரிகளிடம் தேர்வு எழுதிய மாணவர்கள் தேர்வு எழுதும் முறைகள் குறித்து விவரம் பெறுவதற்காக சென்னையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்காக நேரில் ஆஜராகுமாறு சிபிசிஐடி அதிகாரிகள் சிபிஎஸ்இ அதிகாரிக்கு சம்மன் அனுப்பியுள்ளனர்.
இந்தத் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட இடைத்தரகர்கள் பற்றிய முக்கிய தகவல் கிடைத்திருப்பதாகவும், அதை வைத்து இடைத்தரகரை தீவிரமாகத் தேடி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்காக தமிழகத்திலிருந்து வெளி மாநிலங்கள் சென்று தேர்வு எழுதிய மாணவர்களின் விபரங்களையும் சேகரித்து வருவதாக சிபிசிஐடி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தேனி மருத்துவக் கல்லூரியின் முதல்வர் மாணவர் உதித்சூர்யா என்பவர் நீட் தேர்வில் (2019 -2020) முறைகேடு செய்து மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளதாக அளித்த புகாரால் தமிழகமெங்கும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதன் பின்பு இந்த வழக்கானது சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட, பின்பு கிட்டத்தட்ட எட்டு மாணவர்கள் மற்றும் அவருடைய தந்தைகள், இடைத்தரகர்கள் என மொத்தமாக 15 நபர்களை சிபிசிஐடி போலீசார் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.