சென்னை: சென்னையின் திருவிக நகர், நீலாங்கரை உள்ளிட்ட 3 இடங்களில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதில் ஒருவர் சென்னை துறைமுகத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. மேலும், இந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கையகப்படுத்தப்படும் என்ற கூடுதல் தகவலும் வெளியாகி உள்ளது.
கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு கடந்த அக்டோபர் 23ஆம் தேதி காலை நடைபெற்ற கார் குண்டு வெடிப்பில் ஜமேஷா முபின் (வயது 28) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து, இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் விசாரித்தனர்.
இதில், தற்கொலைப் படை தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டப்பட்டிருந்தது தெரிய வந்தது. மேலும், தொடர் சோதனையின்போது வெடி பொருட்கள் தயாரிக்கத் தேவைப்படும் மூலப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த நிலையில், கடந்த மாதம் கோவையில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அதில் கிடைத்த தகவல்களின்படி, தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் புதிய வழக்கைப் பதிவு செய்தனர். இந்த புதிய வழக்கின் அடிப்படையில் சென்னை, கோவை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 30க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று (செப். 16) காலையில் இருந்தே தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேநேரம், சென்னையில் நீலாங்கரை அடுத்த ஈஞ்சம்பாக்கம் பிஸ்மில்லாத் தெருவில் புகாரி என்பவர் வீடு, அயனாவரம் மயிலப்பன் தெருவில் முகமது ஜக்கிரியா என்பவர் வீடு, திருவிக நகர் காமராஜர் தெருவில் முஜிபுர் ரகுமான் என்பவர் வீடு என்ற மூவரது வீடுகளில் காலை முதலே தீவிர சோதனை நடைபெற்று வருகிறது.
சென்னை, கோவை, ஹைதராபாத்தில் இருந்து என்ஐஏ அதிகாரிகள் வந்தனர். அவர்கள் 25 குழுக்களாகப் பிரிந்து 25க்கும் மேற்பட்ட இடங்களில் ஒரே நேரத்தில் சோதனையில் ஈடுபட்டு உள்ளனர். ஒரு குழுவில் 4 முதல் 5 அதிகாரிகள் உள்ளனர். முஜிபுர் ரகுமான் வீட்டில் சோதனை முடிந்து அவரது வீட்டில் இருந்து செல்போன் மற்றும் இரண்டு சிம் கார்டுகளை பறிமுதல் செய்தனர்.
மேலும், அவரை (முஜிபுர் ரகுமான்) சென்னை என்ஐஏ அலுவலகத்தில் ஆஜாராக சம்மன் வழங்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், புகாரி என்பவர் வீட்டில் சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கிடைத்து இருப்பதாக தகவல் கிடைத்து உள்ளன. மேலும், இவர் சென்னை துறைமுகத்தில் முக்கிய அதிகாரியாக இருந்து வருகிறார்.
அதேபோல், சென்னையில் சோதனைக்கு உள்ளாகியுள்ள அனைவரும் கோவை அரபிக் கல்லூரியில் படித்தவர்கள், படிப்பவர்கள் அல்லது அவர்களுடன் தொடர்புடையவர்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. உக்கடம் கார் குண்டு வெடிப்பில் உயிரிழந்த ஜமேசா முபீனும் அரபிக் கல்லூரியில் படித்தவர்தான் என்பது என்ஐஏ சோதனையில் தெரிய வந்துள்ளது.
இதையும் படிங்க : சென்னையில் திடீர் வெடி விபத்து... மர்ம பொருள் வெடித்ததால் பெண் படுகாயம்.. என்ன காரணம்?