சென்னை: நடந்துமுடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைத்து போட்டியிட்டபோதும், ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறவில்லை. இந்நிலையில், அக்கட்சியின் துணைத்தலைவர், பொதுச்செயலாளர்கள் உள்ளிட்டோர் அடுத்தடுத்து கட்சியிலிருந்து விலகினர்.
புதிய குழுவின் பரிந்துரைகள்
இதையடுத்து, கட்சியின் கட்டமைப்பை மேம்படுத்த புதிய குழு அமைக்கப்பட்டது. இக்குழுவினர் மூலம் தயாரிக்கப்பட்ட பரிந்துரைகள், அக்கட்சியின் தலைவர் கமல் ஹாசனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கட்சியினரோடு உரையாடும் கமல்
இந்நிலையில், மநீமவின் பொதுச்செயலாளாரும், ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அலுவலருமான அ.க. மௌரியா அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
அதில், "விரைவில் புதிய அறிவிப்புகளோடு உங்களைச் சந்திப்பதாக மநீம தலைவர் கமல் ஹாசன் தெரிவித்திருந்தார். அதன்படி, நாளை (ஜூன் 26) காலை 11 மணிக்கு நம்முடன் உரையாட இருக்கிறார்.
கட்சியினர் அனைவரும் இந்த இணையவழிச் சந்திப்பில் அவசியம் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த உரையாடலின்போது, மநீமவின் அடுத்தகட்ட பயணம், கட்சி கட்டமைப்பை வலுப்படுத்துதல், உள்ளாட்சித் தேர்தலுக்குத் தயாராகுதல் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கரோனா தடுப்பூசி சான்றிதழில் பாஸ்போர்ட் எண் இணைப்பது எப்படி?