சென்னை: இரண்டாவது முறையாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட செம்மஞ்சேரி பகுதியை ஆய்வு செய்தார். அப்போது அவருடன் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்ட உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
பின்னர் முதலமைச்சர் மாநகராட்சிக்குட்பட்ட செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்புப் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்ட மருத்துவ முகாம்களைப் பார்வையிட்டார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுகளை வழங்கினார். அலமேல்மங்காபுரம் பகுதிக்குச் சென்று மக்களை சந்தித்தார்.
முதலமைச்சர் ஆய்வு
இந்த ஆய்வு குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி கூறியதாவது, "செம்மஞ்சேரி பகுதியை இரண்டாவது முறையாக முதலமைச்சர் பார்வையிட்டார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடிநீர், உணவு உள்ளிட்டவற்றைத் தொடர்ந்து வழங்கி வருகிறோம்.
மழைநீர் தேங்காத அளவிற்கு செயல்படுவோம்
மழைநீரை அப்புறப்படுத்தப் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். தொற்று நோய் ஏற்படாமல் இருக்க மருத்துவ முகாம்கள் நடத்தி வருகிறோம். வரும் நாள்களில் மழைநீர் தேங்காத அளவிற்கு அலுவலர்கள் இணைந்து செயல்படுவோம்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டிற்கு 70 ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்