சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, நாங்குநேரி வேட்பாளர் ரூபி மனோகரன், காங்கிரஸ் சட்ட மன்ற தலைவர் ராமசாமி, முன்னாள் அமைச்சர் தங்கபாலு, எம்.பி வசந்தகுமார் உள்ளிட்டோர் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து பேசினர். அப்போது, நாங்குநேரி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ரூபி மனோகரன் ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் ஸ்டாலின் பேசுகையில், நாங்குநேரி தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ரூபி மனோகரனுக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். ஆக, கடந்த முறை தேர்தலில் நாங்குநேரி தொகுதியில் எவ்வாறு வெற்றி பெற்றோமோ, அதை விட பன்மடங்கு அதிகமான வாக்கு வித்தியாசத்தில் எங்கள் கூட்டணி வெற்றி பெறும் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், இந்த தேர்தலையொட்டி அங்கு பரப்புரை மேற்கொள்ள உள்ளேன். அதே போல் நாங்குநேரி தொகுதிக்கு திமுக சார்பில் ஐ.பொன்னுச்சாமி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் பணிக்குழுவில் கனிமொழி உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதே போல் காங்கிரஸ் கட்சி சார்பில் நாளை மறு நாள் தேர்தல் பணிக்குழு அறிவிக்கப்பட உள்ளது. அந்த குழுவோடு ஒற்றுமையாக வெற்றி என்ற இலக்கோடு எங்கள் கூட்டணி பணியாற்றும்.
மேலும், நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அளித்த வாக்குறுதிகள் படி, தேர்தல் பரப்புரை மேற்கொள்ள இருக்கிறோம். குறிப்பாக அதிமுகவின் கலெக்சன், கரக்சன், கரப்சன், நாட்டில் நிலவி வரும் சர்வாதிகாரம், சட்ட ஒழுங்கு பிரச்னைகளையெல்லாம் முன்னிறுத்தி எங்கள் தேர்தல் பரப்புரை இருக்கும் என்றார்.