திமுக பொதுச்செயலாளராக இருந்த பேராசிரியர் அன்பழகன் கடந்த மார்ச் 7ஆம் தேதி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து அவர் வகித்த பொதுச்செயலாளர் பதவி யாருக்கு செல்லும் என்ற எதிர்பார்ப்பு திமுகவினர் மத்தியில் எழுந்தது.
தற்போதைய திமுக பொருளாளர் துரைமுருகனுக்கே பொதுச்செயலாளராக வாய்ப்புகள் அதிகம் என்று அறிவாலயம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. துரைமுருகன் வகித்து வரும் பொருளாளர் பதவி திமுக கொள்கை பரப்புச் செயலாளர் ஆ.ராசா, துணை பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி போன்ற முன்னனி தலைவர்களில் யாருக்கேனும் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
திமுகவை பொறுத்தவரை தலைமை பொறுப்புகள் அனைத்தும் பொதுக்குழு கூட்டம் கூடி முடிவெடுக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், பேராசிரியர் அன்பழகன் மறைவுக்குப் பிறகு திமுக பொதுக்குழு கூட்டம் மார்ச் 29ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. கரோனா பரவலால் திமுக பொதுக்குழு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது திமுக பொதுக்குழு கூட்டம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வருகின்ற செப்டம்பர் 9ஆம் தேதி காணொலி வாயிலாக திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று திமுக தலைமை அறிவித்துள்ளது. இதற்கு முன்பாக கட்சி பணிகள் மற்றும் திமுக பொதுக்குழு கூட்டம் பற்றி ஆலோசிக்க செப்டம்பர் 3ஆம் தேதி திமுக மாவட்ட செயலாலர் கூட்டம் காணொலி வாயிலாக நடைபெறுகிறது.
இதையும் படிங்க: அதிகாரவர்க்கத்தின் ஒடுக்குமுறைக்கு எதிரான அடையாளம் அனிதா