சென்னை மாநகராட்சி கோட்டூர்புரத்தில் புதர் மண்டிக்கிடந்த மாநகராட்சி இடமான 20,724 சதுர அடி நிலத்தில் அடர்வனம் அமைக்கப்படவுள்ளது.
மியாவாக்கி என்னும் அடர்ந்த நகர்ப்புறக் காடுகளை உருவாக்கும் திட்டத்தின் கீழ் அடர்வனம் அமைக்கப்படவுள்ளது. ஜப்பானிய தாவரவியல் நிபுணர் மியாவாக்கி என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட சிறந்த தாவரவியல் முறையில் அடர்வனம் உருவாக்கப்படுகிறது. அதன்படி, 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஒரே இடத்தில் அடர்த்தியான மண்ணின் தன்மைக்கேற்ப 40 வகையான மரங்கள் ஒரு மீட்டர் இடைவெளியில் நீர் மருது, நாவல், புன்னை, இலுப்பை, பலா, வேங்கை, மந்தாரை, வாழை, நெல்லி உள்ளிட்ட 2,000 நாட்டுப்புற மரக்கன்றுகள் நடப்படவுள்ளன.
![மியாவாக்கி அடர்வனம் ஜப்பானிய தாவரவியல் அறிஞர் மியாவாக்கி சென்னை மாநகராட்சி அடர்வனம் Chennai corporation miyawaki dense forest](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/5836321_440_5836321_1579942064313.png)
ஏற்கனவே அந்நிலத்தில் 1,600 மெட்ரிக் டன் கட்டடக் கழிவுகள் கொட்டப்பட்டிருந்தது அகற்றப்பட்டது. பின்னர் நான்கு அடி ஆழத்திற்கு மண் எடுக்கப்பட்டு, திடக்கழிவுகள், தென்னை நாறு, மாட்டுச்சாணம் என 112 மெட்ரிக் டன் அளவிற்கு மூன்று அடுக்குகளாக நிலம் பதப்படுத்தப்பட்டுள்ளது.
அடுத்தகட்டமாக வளசரவாக்கம் பகுதியிலும் மியாக்கிவாக்கி அடர்வனம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். இவ்வாறான காடுகள் உருவாக்கப்படுவதால், நகர்ப்புறத்தில் சுற்றுச்சூழல் மாசு குறைக்கப்பட்டு காற்றின் தூய்மை மேம்படும் என்றும் நகர்ப்புறங்களில் அழிந்துவரும் அரிய வகை பறவைகள், விலங்குகளும் விருத்தியடைய இந்த அடர்வனங்கள் உதவியாக இருக்கும் எனவும் பிரகாஷ் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பிரேசில் நாட்டு ஜனாதிபதிக்கு விவசாயிகள் கருப்புக்கொடி!