சென்னை: கிளாம்பாக்கத்தில் அமைக்கப்பட்டு வரும் புதிய புறநகர் பேருந்து முனையத்திலிருந்து, தென்மாவட்ட பேருந்துகள் செல்ல மாற்று வழித்தடங்கள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சேகர்பாபு தலைமையில் கிளாம்பாக்கம் புதிய புறநகர் பேருந்து முனையத்திலிருந்து, தென்மாவட்ட பேருந்துகள் செல்ல மாற்று வழித்தடங்கள் அமைப்பது தொடர்பாகவும், அரசு பேருந்துகளை போக்குவரத்து நெரிசலின்றி மாற்று வழிபாதையில் ஜி.எஸ்.டி சாலை வழியாக செல்வது தொடர்பாகவும் காவல்துறை, நெடுஞ்சாலைத்துறை, போக்குவரத்துத்துறை, மற்றும் வனத்துறையுடன் இணைந்து ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கிளாம்பாக்கம் புதிய புறநகர் முனையத்திலிருந்து ஜி.எஸ்.டி. சாலை வழியாக போக்குவரத்து நெரிசலின்றி பேருந்துகளை இயக்குவது தொடர்பாகவும், தென்மாவட்ட பேருந்துகள் செல்ல மாற்று வழித்தடங்கள் அமைப்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டன. மேலும் கிளாம்பாக்கம் புதிய புறநகர் முனையத்திலிருந்து சென்னை மாநகர பேருந்துகள் போக்குவரத்து நெரிசலின்றி செல்ல இரண்டு வழித்தடங்கள் அடையாளம் காணப்பட்டு, வண்டலூர் – கேளம்பாக்கம் சாலை – போலீஸ் அகாடெமி சாலை – நல்லம்பாக்கம் சாலை – ஊனமாஞ்சேரி – ஜி.எஸ்.டி சாலை ஊரபாக்கம் வழியாகவும் மற்றும் கூடுவாஞ்சேரி – மாடம்பாக்கம் சாலை – ஆதனுர் நெடுஞ்சாலை முதல், மாடம்பாக்கம் சாலை – யூனியன் சாலை – வண்டலுர் – வாலாஜாபாத் சாலை வழியாகவும் பேருந்துகள் செல்வது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் அபூர்வா, தாம்பரம் மாநகர காவல் ஆணையாளர் அ.அமல்ராஜ், சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர், முதன்மை செயல் அலுவலர் கவிதா ராமு உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கடந்த மார்ச் மாதத்தில் அமைச்சர் சேகர் பாபு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை ஆய்வு செய்தார். அப்போது பேசிய அவர், கிளாம்பாக்கம் பேருந்து நிலைய பணிகளை விரைந்து முடிப்பது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தியுள்ளோம். மாதத்திற்கு ஆறு முறை இது சம்பந்தமான ஆய்வு கூட்டங்களை துறையின் செயலாளர் முழு வேகத்தோடு நடத்திக் கொண்டு, எந்த பணிகளில் தொய்வு இருக்கின்றதோ அங்கெல்லாம் பணிகளை விரைவு படுத்துவதற்கும், அதற்கு உண்டான தேவைகளை நிறைவுப் படுத்துவதற்கும் முழு வீச்சில் பணிகள் நடக்கின்றன.வெகு விரைவில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளது என்றார்.
மேலும் பணிகள் நிறைவு பெற்றவுடன் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு சென்று அவரையே திறப்பு விழாவிற்கு அழைக்க உள்ளோம். எவ்வளவு விரைவாக முடிக்க முடியுமோ அத்தனை வேகத்தில் இந்த பணிகளை முடிக்க திட்டமிட்டு கொண்டிருக்கிறோம் என தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் கூறியபடி தற்போது இந்த சாலையின் இறுதி கட்டப்பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: Vijaya Bhaskar Election Case: முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மனு தள்ளுபடி: தேர்தல் வழக்கில் பரபரப்பு!