சென்னை காசிமேட்டில் நடந்த நிகழ்ச்சியில் ஊரடங்கு காரணமாக மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மீனவர்களுக்கு உதவும் வகையில் டிபி வேர்ல்டு என்ற தனியார் நிறுவனம் வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களை வழங்கியது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மீனவர்களுக்கு அத்தியாவசிய பொருள்கள் அடங்கிய பைகளை வழங்கினார்.
பின்னர் காசிமேடு மீன் விற்பனை செய்ய கட்டப்பட்டு வரும் பணிகளை பார்வையிட்டார். அப்போது செய்தியாளர்களிடம் கூறியதாவது, "கரோனா பாதிப்பால் மீன்பிடிக்க செல்ல முடியாமல் தவித்த மீனவர்களுக்கு மீன்பிடி தடை காலத்தைக் குறைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. ஆசியாவிலேயே மிகப்பெரிய மீன் சந்தையான காசிமேடு மீன் சந்தையில் கூட்டம் அதிகமாகி தொற்று பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
இதை தடுக்க மீனவர்களிடம் ஆலோசனை கேட்டு தகுந்த இடைவெளி விட்டு எப்படி மீன்கள் விற்பனை செய்வது குறித்து ஆலோசித்த பின்னர் அரசு அலுவலர்கள் மீன் விற்பனை செய்ய ஏற்பாடு செய்வார்கள். சென்னையில் அதிக மக்கள் தொகை இருப்பதால் தான் பாதிப்பு அதிகம் வருகிறது. எனவே தொற்று பாதிப்பை தடுக்க அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருகிறது" என்றார்.
இதையும் படிங்க: நளினி, முருகன் தாக்கல்செய்த வழக்கு: அரசுக்கு உயர் நீதிமன்றம் குட்டு!