வேட்பு மனு தாக்கல்
ராயபுரம் தொகுதியில் போட்டியிட நேற்று (மார்ச் 15) வேட்புமனு தாக்கல் செய்தார் அந்தத் தொகுதியின் அதிமுக வேட்பாளர் ஜெயக்குமார். இதைத்தொடர்ந்து பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள சஞ்சீவிராயர் ஆஞ்சநேயர் கோயிலில் தரிசனம் செய்துவிட்டு, தனது தேர்தல் பரப்புரையைத் தொடங்கினார்.
பேரன்களுடன் சைக்கிளில் பரப்புரை
தனது மூன்று பேரன்கள் உடன் சைக்கிள் ரிக்ஷாவில் பரப்புரையை மேற்கொண்ட ஜெயக்குமாருக்கு வழிநெடுகிலும் அதிமுகவினரும், கூட்டணிக் கட்சியினரும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
சாலையின் இருபுறங்களிலும் மலர்த்தூவி வரவேற்ற மக்களிடையே கைக்கூப்பி நன்றி தெரிவித்ததோடு, இரட்டை இலையில் வாக்கு அளிக்குமாறும் ஜெயக்குமார் கேட்டுக்கொண்டார்.
தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றம்
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "அதிமுக தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகள் அனைத்துமே நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் நிச்சயம் நிறைவேற்றப்படும்.
கடந்த தேர்தல்களில் அளித்த வாக்குறுதிகளான இலவச மிக்சி கிரைண்டர், சுமார் மூன்று கோடிப் பேருக்கு வழங்கப்பட்டது. தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை அறிவித்தபோது திமுக உள்ளிட்ட கட்சிகள் கேலி கிண்டல் செய்தனர். ஆனால் 2011இல் இருந்து இதுவரை சுமார் ஆறரை டன் தங்கம் தமிழ்நாட்டிலுள்ள பயனாளிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 12 லட்சம் குடும்பத்தினர் பலநடைந்துள்ளனர்.
நிறைவேற்றப்படக்கூடிய திட்டங்கள்தான் தேர்தல் அறிக்கையில் உள்ளன
அதிமுகவை பொறுத்தவரை கொடுத்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றும், மக்களுக்குத் தேவையான மேலும் பல திட்டங்களையும் நிறைவேற்றும்.
ராயபுரம் தொகுதியை பொறுத்தவரை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெறும். கடந்த 10 ஆண்டுகளில் வடசென்னையில் அமைந்திருக்கும் ராயபுரம் தொகுதியில் மேன்மேலும் பல்வேறு நலத்திட்டப் பணிகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
தென் சென்னைக்கு இணையாக வடசென்னையின் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. நிறைவேற்ற முடியும் என்ற திட்டங்களைத்தான் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளோம்" என்றார்.
இதையும் படிங்க: தேர்தல் அறிக்கையால் மக்களை ஏமாற்ற முடியாது! - வைகோ