சென்னையில் குழந்தைகள் தின விழாவில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ”சென்னை ஐஐடி மாணவி தற்கொலை தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த விசாரணை அறிக்கையின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
காவல் துறையில் 350 கோடி ரூபாய் ஊழல் என்ற ஸ்டாலின் வைத்த குற்றச்சாட்டு குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், ”திமுக தலைவர் ஸ்டாலின் நாக்கில் சனி இருக்கிறது. எதையும் தவறாக பேசுவதே அவருடைய வாடிக்கையாக இருக்கிறது. திமுகவின் பொதுக்குழுவில் அவர் இப்படிச் சொல்கிறார். ஆளுங்கட்சியாக இருந்தால் தவறுகளைப் பார்த்து செய்ய வேண்டும். ஆனால் எதிர்கட்சியாக இருந்தால் தவறுகளைத் துணிந்து செய்யலாம் என அவர் பேசியுள்ளார்” என்று விமர்சித்தார்.
மேலும் பேசிய அவர், ”உள்ளாட்சித் தேர்தலைச் சந்திப்பதற்கு அதிமுக தயாராகி வருகின்ற நிலையில், தேர்தலை நிறுத்தும் நோக்கில் திமுக நீதிமன்றம் மூலமாக சதி செய்கிறது. அதனால்தான் முதலில் தேர்தல் ஆணையரை பார்த்து புகார் மனு அளித்துள்ளனர். அதனடிப்படையில் அவர்கள் நீதிமன்றம் செல்வார்கள். ஏற்கனவே கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெறவிருந்த தேர்தலை திமுகவினர்தான் வழக்கு தொடர்ந்து தடுத்து நிறுத்தினர்.
நடிகர் விஜயகாந்த் நடிகர் என்பதை தாண்டி தற்போது ஒரு தலைவராக மாறிவிட்டார். அவர் நடிகர் என்று கூற முடியாது. சட்டப்பேரவைத் தேர்தலின்போது, நடிகர் ரஜினியுடன் கூட்டணி குறித்து கட்சித் தலைமை முடிவு செய்யும். தமிழ்நாட்டில் திமுகவை தவிர அனைத்து கட்சிகளும் அதிமுகவிற்கு நண்பர்கள்தான். அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை; நிரந்தர எதிரியும் இல்லை” என்று கூறினார்.
இதையும் படிங்க: 'ரஜினி படங்கள்தான் எனக்கு மிகவும் பிடிக்கும்' - மனம் திறந்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி!