சென்னை: தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தமிழகத்தின் அனைத்து கட்சிகளை சேர்ந்த 12 எம்.பி.க்கள் இன்று (செப். 18) மாலை டெல்லி சென்று மத்திய நீர்வளத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்து காவிரியில் கர்நாடகா நீர் திரந்துவிட வலியுறுத்துவது குறித்து பேச உள்ளனர்.
காவிரி நீர் மேலாண்மை கமிட்டி, கர்நாடகாவிடம் 15 நாட்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விட உத்தரவிட்ட நிலையில் கர்நாடக அரசு தண்ணீர் திறக்கவில்லை. இந்நிலையில் உச்சநீதிமன்றத்தினால் காவேரி மேலாண்மை வாரியம், ஒழுங்காற்று குழு நியமிக்கப்பட்டது, ஆனால் அந்த ஆணையம் சொல்லியும் கர்நாடக அரசு கேட்காததால் அமைச்சர் துரைமுருகன் தலைமையில் 12 எம்.பி.க்கள் மத்திய நீர்வளத் துறை மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்து பேச உள்ளனர்.
இது குறித்து சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி செல்லும் முன் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "மத்திய நீர் வளத்துறை மந்திரியை சந்திக்க செல்கிறோம். இரண்டு குழுவையும் நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பதால் நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்று மத்திய அமைச்சரிடம் கேட்கப் போகிறோம்.
தண்ணீரை திறக்க கர்நாடக அரசுக்கு அழுத்தமோ அறிவுரையோ உத்தரவோ அளிக்க வேண்டும். கர்நாடக அரசு தீர்ப்பாயத்தை எதிர்க்கிறார்கள் ஆனால் நாங்கள் அதைக் கேட்டோம். அரசிதழில் வெளியிட வேண்டாம் என்று கர்நாடகா கேட்டுக்கொண்ட இடைக்கால உத்தரவு எங்களுக்கு கிடைத்தது. உச்சநீதிமன்றம் தலையீட்டிற்குப் பிறகுதான் ஒவ்வொரு முறையும் கர்நாடகாவிடம் இருந்து தமிழகத்துக்கு காவிரி நீர் கிடைக்கும்.
இதையும் படிங்க: "காவிரியை திறந்து விட நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகிறோம்" - திருமாவளவன்!
கர்நாடகாவில் உள்ள தண்ணீரை ஆய்வு செய்து பரிசீலனை செய்து பின்னர் தான் தண்ணீர் திறக்க ஆணையம் உத்தரவிட்டது. தண்ணீர் பிரச்சினையில் கர்நாடகம் பொய் சொல்கிறது" என்று கூறினார். மேலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்திக்கையில், "கர்நாடகா அரசு அந்த மாநில மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஒரு முடிவை எடுத்துள்ளது. அதே நேரத்தில் காவிரி மேலாண்மை வாரியம் தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய நீரின் அளவு என்ன என்பதை சொல்லியிருக்கிறது. நொடிக்கு 5 ஆயிரம் கன அடி நீர் திறந்து விட வேண்டும் என்பது தான் வரையறை. போதிய தண்ணீர் இல்லாததால் திறந்து விட இயலாது என கர்நாடக அரசு சொல்லி வருகிறது.
தமிழ்நாடு மக்களின் நலனை கருத்தில் கொண்டு நமக்கான தேவையை பெற வலியுறுத்த வேண்டிய நிலையில் உள்ளோம். தமிழகத்திற்கு திறந்து விடக்கூடிய தண்ணீரின் அளவை சரியாக கொடுக்க வேண்டும் மத்திய நீர்வளத்துறை அமைச்சரை தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் சந்தித்து கோரிக்கை முன்வைக்க அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்று சேர்ந்து செல்கிறோம். அதை அவர்கள் நடைமுறை படுத்த முன்வருவார்கள் என்று நம்புகிறோம்" என்று கூறினார்.
இதையும் படிங்க: அதிமுக பாஜகவுடன் கூட்டணியில் இல்லை.. அண்ணாமலைக்கு ஜெயக்குமார் எச்சரிக்கை!