சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் தமிழ்நாடு தொழிலாளர் நல ஆணையரக அலுவலர்களுக்கான பணித்திறனாய்வு கூட்டம், தொழிலாளர் நலன் - திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் தலைமையில் இன்று (ஜூன்.12) நடைபெற்றது.
இதில் அமைப்புசாரா தொழிலாளர்களின் பதிவு, புதுப்பித்தல் நல உதவி கோரும் விண்ணப்பங்கள் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்து முடிக்கவும், தொழிலாளர் சட்டங்களை முறையாக விரைந்து செயல்படுத்தவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கிண்டியில் உள்ள வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை தலைமை அலுவலகத்தில், அமைச்சர் சி.வி.கணேசன் ஆய்வு செய்தார்.
![தமிழ்நாடு தொழிலாளர் நல ஆணையரக அலுவலர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்ட அமைச்சர் சி.வி. கணேசன்.](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12109959_cvsanmugam.jpg)
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் சி.வி.கணேசன் பேசுகையில், ”தமிழ்நாட்டில் தற்போது வரை 64 லட்சம் பேர் வேலைக்காக பதிவு செய்துள்ளனர். வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய தவறவிட்டவர்கள், புதுப்பிக்க அரசு வாய்ப்பு வழங்கி உள்ளது. அதனை பயன்படுத்தி ஐம்பது லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயன் அடைந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் குழந்தை தொழிலாளர்கள் இல்லாத நிலையை உருவாக்க தொடர்ச்சியாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குழந்தை தொழிலாளர்கள் குறித்து 1098 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம். குழந்தை தொழிலாளர்களை ஊக்குவிப்பவர்கள் அல்லது அவர்களுக்கு வேலை வழங்குபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
கரோனா காலகட்டத்தை காரணம் காட்டி ஆள் குறைப்பு செய்யும் நிறுவனங்கள் குறித்து புகார் வந்தால், விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அரசு நிர்ணயம் செய்த கால அளவை மீறி, தொழிலாளர்களை வேலை செய்ய வற்புறுத்தும் நிறுவனங்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
இதையும் படிங்க : குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு நாள்: பிஞ்சுகளைக் கிள்ளி எறியாதீர்!