ஈரோடு பகுதியில் பவானி ஆறு, காளிங்கராயன் கால்வாய் ஆகியவற்றில் சட்டவிரோதமாக நீர் உறிஞ்சப்படுவதால், அனைவருக்கும் சம அளவிலான தண்ணீர் கிடைப்பதில்லை எனவும், தமிழ்நாடு அரசு 1962, 1967ஆகிய ஆண்டுகளில் பிறப்பித்த அரசாணை அடிப்படையில் தண்ணீர் பகிர்ந்தளிக்க உத்தரவிட வேண்டும் எனவும் ஈரோட்டைச் சேர்ந்த யு.எஸ்.பழனிவேல் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு முன்னதாக நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்த நிலையில், சட்டவிரோதமாக நீர் எடுக்கப்படுகிறதா என்பது குறித்து திடீர் ஆய்வுகள் மூலம் கண்டறிவதாகவும், அவ்வாறு எடுக்கப்பட்டால் குழாய்கள் அகற்றப்பட்டு, மின் இணைப்பும் துண்டிக்கப்படுவதாகவும் தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தண்ணீர் ஒரு தரப்பினருக்கானது அல்ல...
தொடர்ந்து, காளிங்கராயன் வாய்க்கால் நீரேற்றுப் பாசன விவசாயிகள் சங்கம் தரப்பில் பாசனப் பரப்பை முறையாக ஒழுங்குமுறைப்படுத்த பல கோரிக்கைகள் வைத்தும் நிறைவேற்றவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் பிறப்பித்த உத்தரவில், ”உலகில் உள்ள ஒவ்வொரு உயிரினத்துக்கும் ஆதாரமாக உள்ள தண்ணீர் இல்லாமல் யாரும் வாழ முடியாது. கிடைக்கும் தண்ணீரை அனைவருக்கும் பகிர்ந்தளிக்க வேண்டும் என அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், ஒரு தரப்புக்கு மட்டும் தண்ணீர் கிடைப்பதாக அமைந்து விடக்கூடாது.
தண்ணீர் திருடினால் குற்றவியல் நடவடிக்கை
அனைவருக்கும் சம அளவிலான தண்ணீர் கிடைக்கும் வகையில், பாசனப் பரப்பை முறையாக பதிவு செய்ய வேண்டும். விவசாய நிலங்களை விரிவுபடுத்துவதன் மூலம் நாடு பலனடையும்” எனத் தெரிவித்தார்.
மேலும், பதிவுசெய்யப்பட்ட பாசனப் பரப்பில் உள்ள நிலங்களுக்கு முதலில் தண்ணீரை பகிர்ந்தளிக்க வேண்டுமென்பது அரசின் முடிவாக இருப்பதால், மனுதாரரின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி, திருடுவதற்கு ஏதுவான வளமாக தண்ணீர் இருப்பதால், அதை சட்டவிரோதமாக எடுப்பவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளார்.
அனைவருக்கும் தண்ணீர் பகிர்ந்தளிக்க கொள்கை
தண்ணீரை திருடுபவர்கள் மீது பொதுப்பணித்துறையும், நீர்வள ஆதாரத் துறையும் எடுக்கும் நடவடிக்கைகள் இல்லாமல், காவல் துறையும் வழக்குப் பதிவு செய்தால் தான் முறையான புகார்கள் வரும் எனவும் தனது உத்தரவில் அவர் தெளிவுபடுத்தி உள்ளார்.
எந்த ஒரு தனி மனிதனும் பாதிக்கப்படாத வகையில், அனைவருக்கும் தண்ணீர் பகிர்ந்தளிப்பதற்கான கொள்கை நடைமுறைபடுத்த வேண்டுமென அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: 22 வயதில் யூனியன் சேர்மன்: நெல்லையைக் கலக்கும் இளம்பெண்!