தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 103ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் சார்பாக அம்பத்தூர் பகுதியில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் வி. அலெக்சாண்டர் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், தலைமை கழகப் பேச்சாளர் க. பொன்னையன், அமைச்சர்கள் பாண்டியராஜன், பென்ஜமின் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் எம்ஜிஆரின் சிறப்புகளையும், தமிழ்நாட்டு மக்களுக்கு செய்த திட்டங்களையும் பற்றியும் எடுத்துரைக்கப்பட்டன.
இதன் பின்னர் செய்தியாளரைச் சந்தித்து பேசிய அமைச்சர் பாண்டியராஜன், "தமிழ்நாட்டில் எங்கள் கட்சியின் கொள்கை, எங்கள் கட்சியின் நிலைப்பாடுகள் கொண்டு இன்றைக்கு மக்களை முழுமையாக எங்கள் பக்கம் ஈர்க்கும் பணியில் நாங்கள் ஈடுபட்டு வருகிறோம். யார் வருவார், யார் எந்தக் கொள்கை உடையவர் என்பது பற்றி எங்களுக்குக் கவலை கிடையாது.
கண்டிப்பாக, எங்களைப் பொறுத்தவரை திமுக தான் ரஜினியின் பேச்சுக்கு மறுபேச்சு பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால், அவர் சொன்னது நேரடியாகவே திமுகவை தான் சொல்லியிருக்கிறார். அதற்கு அவர்கள் பதில் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். எங்களைப் பொறுத்தவரை நாங்கள் இந்த சீனிலேயே கிடையாது. ஓட்டப்பந்தயத்தில் நாங்கள் தான் முன்னணியில் இருக்கிறோம்.
அதனால் இந்த தேவையற்ற சண்டை வந்து, எங்களுக்கும் பங்கு இல்லாத ஒரு சண்டை. எங்கள் கொள்கை, எங்கள் சித்தாந்தங்கள், எங்கள் சாதனைகள் இதைத் தான் நாங்கள் மக்களிடம் கொண்டு செல்கின்றோம்" என்றார்.
இதையும் படிங்க: குடியுரிமை திருத்தச் சட்ட ஆதரவு நோட்டீஸ்கள் - பேருந்தில் விநியோகம் செய்த ஹெச்.ராஜா!