‘மனிதநேயம் - சுயமரியாதை’ என்ற தலைப்பில் சென்னை எழும்பூரிலுள்ள பெரியார் திடலில் நேற்று சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. இதில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, ஊடகவியலாளர் திருமாவேலன், முனைவர் பெ.ஜெகதீசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
அப்போது பேசிய திராவிடர் கழகத்தின் தலைவர் வீரமணி, "மனிதநேயத்திற்குப் பாடுபட்டவர் பெரியார். பார்ப்பனியத்தை எதிர்த்தவர். தந்தை பெரியாருக்கு அவரது வாழ்வில் இரண்டு மிகப்பெரிய வாய்ப்புகள் கிடைத்தன. பள்ளிக்கூடம், கல்லூரிக்கு செல்லாமல் பட்டம்பெறதாது ஒரு வாய்ப்பு. மற்றொன்று அவருடைய செல்வமுள்ள குடும்பம்.
இயக்க பரப்புரைகளை தொடங்கிய போது, அந்தச் செல்வங்களை வைத்து பிரச்சாரத் தோழர்களுக்கு பயணச்சீட்டு வாங்கி ஊர் ஊராக அழைத்துச் சென்று இயக்கத்தை வளர்த்தார். ஆனால் அதைத் தொண்டர்கள் வட்டியும், முதலுமாக அவருக்குத் திருப்பி தந்துவிட்டனர். அது வேறு.
நான் நிம்மதியாகச் சாவேன் என்ற பெரியார், கடைசிக் காலங்களில் கவலையுடன்தான் இறந்தார். தி.நகரில் பேசிய கடைசி கூட்டத்தில் பெரியார், 'எனக்கு ஒரே ஒரு கவலைதான். தமிழர்களே, திராவிடர்களே உங்களைச் சூத்திரராகவே விட்டுச் செல்கிறேன் என்கிற கவலைதான்' என்றார். ஏனென்றால் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்கிற சட்டம் அப்போது நிறைவேற்றப்படவில்லை.
அதைத்தான் நெஞ்சில் ஒரு முள்ளோடு புதைத்தோம் என்று கலைஞர் சொன்னார். அந்த முள்ளை அவரின் தொண்டர்கள் நாம் அகற்றினோம். அதிலும் பெரியார் வெற்றி பெற்றார். உலகில் அத்தனை அமைப்புகளும் தனித்தனியாக இருக்கின்றன. இது அத்தனையும் நான் இணைக்க வேண்டும்.
ஆம், 1926-இல் பெரியார் சொன்னதை, அமெரிக்க மாநாட்டில் ஒரு அம்மையார் சொல்கிறார் என்றால் பெரியாரின் பார்வை எவ்வளவு தொலைநோக்கானது என்பதைப் பார்க்க வேண்டும். அவருடைய சிந்தனையை உலகம் ஏற்றுக்கொள்ளும். பெரியார் உலகமயமாகிறார். உலகம் பெரியார் மையமாகிறது. வெற்றி நமக்கு" என்று உரை நிகழ்த்தினார்.