சென்னை மாநகாராட்சியில் பணிபுரியும் துப்புரவுப் பணியாளர்களுக்கான செங்கொடி சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தலைமைச் செயலகத்தை நோக்கி பேரணி சேப்பாக்கத்தில் தொடங்கியது.
நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்ட பேரணி சென்றபோது செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த செங்கொடி சங்கத்தின் தலைவர் மகேந்திரன் கூறுகையில், ”மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் நிர்ணயிக்கப்பட்ட ஊதியத்தைக் கூட 25 மாதங்களாக வழங்காமல் வைத்துள்ளது. 15 மண்டலங்களில் 11 மண்டலங்களைத் தனியாருக்குக் கொடுக்க ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன.
சென்னை சி.எம்.எஸ். ராம்கி நிறுவனத்துடனும் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதுவரை ஊழியர்கள் 15 பேரின் பி.எப். பணம் முறையாக கட்டப்படாமல் சுமார் 20 கோடிக்கும் அதிகமாக மோசடி செய்யப்பட்டுள்ளது. இச்சூழலில் மாநகராட்சி மீண்டும் இதே நிறுவனத்திற்கு ஒப்பந்தங்களை வழங்க திட்டமிட்டுள்ளது. அது தவிர்க்கப்பட வேண்டும்.
தனியார் ஒப்பந்தப் பணிகள் வழங்கினாலும் ஏற்கனவே பணியாற்றியவர்களுக்குத்தான் பணிகள் வழங்கப்பட வேண்டும். பல ஆண்டுகளாக என்எம்ஆரில் பணியாற்றும் பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படாமல் இருக்கிறார்கள். எங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் துப்புரவுப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்துப் பணியாளர்களும் கட்டாய வேலை நிறுத்தத்தில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்படும் என அரசுக்கு எச்சரிக்கை விடுக்கிறோம்.
பின்னர் கோட்டையை நோக்கி பேரணி செல்ல முயன்றவர்களுக்கு காவல் துறையினர் அனுமதி மறுத்ததால் அவர்கள் கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க: புதிய விடுதி கோரி உடைமைகளுடன் கல்லூரி மாணவர்கள் போராட்டம்