சென்னை குரோம்பேட்டையை அடுத்த அஸ்தினாபுரம் பஜனை கோயில் தெருவைச் சேர்ந்தவர் புருஷோத்தமன்(37). இவர் கடந்த 5ஆம் தேதி மாலை தனது நண்பர்களோடு சேர்ந்து அதேதெருவில் உள்ள விவசாய கிணற்றுக்குச் சென்று குளித்தார்.
நீச்சல் அடித்த களைப்பில் சிலர் கிணற்றின் மேல் அமர்ந்திருந்தனர். அப்போது பின்னால் வந்த கார்த்திக்(36) என்பவர் புருஷோத்தமன் முதுகில் எட்டி உதைத்தார்.
கிணற்றில் குதித்த அவர் வெகுநேரமாக வெளியே வராத காரணத்தினால், அருகில் இருந்த நண்பர்கள் உடனடியாக கிணற்றுக்குள் குதித்து புருஷோத்தமனை மீட்டு குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக சிட்லபாக்கம் காவல் துறையினர் 174 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சம்பவ இடத்திற்குச் சென்று சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில் புருஷோத்தமனை, கார்த்திக் முதுகில் காலால் எட்டி உதைத்து கிணற்றில் தள்ளியது தெரியவந்தது. அதனடிப்படையில் கார்த்திகை கைது செய்து விசாரணை செய்ததில், குடிபோதையில் விளையாட்டாக எட்டி உதைத்தேன் என்றும் அவர் உயிரிழப்பார் என நினைக்கவில்லை எனக் கண்ணீர் மல்க வாக்குமூலம் அளித்தார். பிறகு காவல் துறையினர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.