சென்னை : பன்னாட்டு விமான நிலையத்திற்கு சார்ஜாவில் இருந்து வரும் விமானத்தில் பெரும் அளவில் போதை மாத்திரைகள் கடத்தி வருவதாக விமான நிலைய சுங்கத்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இந்தநிலையில் சார்ஜா விமானத்தில் வந்த உகாண்டா நாட்டைச்சேர்ந்த எலி ஜேம்ஸ் ஒப்பி(21) வருகை வந்தார். இவரது நடவடிக்கையை கண்ட அலுவலர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
உகாண்டா இளைஞரை நிறுத்தி சுங்கத்துறை அலுவலர்கள் விசாரித்தனர். சுற்றுலா வந்ததாகக் கூறி முன்னுக்குப் பின் முரணாகப் பேசினார். இதையடுத்து உடமைகளை சுங்கத்துறை அலுவலர்கள் சோதனை செய்த போது எதுவும் இல்லை.
பின்னர் தனியறைக்கு அழைத்துச்சென்று விசாரித்தனர். அப்போது இளைஞர் வயிற்றில் ஏதோ சந்தேகத்திற்குரிய பொருள் மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. உகாண்டா இளைஞரை ஸ்கேன் செய்தனர். வயிற்றில் அதிகமான மாத்திரைகள் இருப்பதாகத் தெரியவந்தது.
கேப்சூல்களை ஆய்வுக்காக அனுப்பியதில் ஹெராயின் போதை மாத்திரைகள் எனத்தெரியவந்தது.
ரூ. 6 கோடியே 58 லட்சம் மதிப்புள்ள 940 கிராம் எடை கொண்ட ஹெராயின் போதை மாத்திரைகளைப் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக உகாண்டா இளைஞர் எலி ஜேம்ஸ் ஒப்பியை, கைது செய்து ஹெராயின் போதை மாத்திரைகளை எங்கிருந்து யாருக்காக கடத்தி வரப்பட்டது? இதன் பின்னணியில் யார் உள்ளனர் என விசாரணை நடந்தி வருகின்றனர்.
கடந்த 2 தினங்களுக்கு முன் கோவையில் 'அயன்' படபாணியில் ரூ. 4 கோடி மதிப்புள்ள போதை மாத்திரைகளை கடத்தி வந்த உகாண்டா நாட்டுப்பெண் கைது செய்யப்பட்ட நிலையில், அதே பாணியில் சென்னையில் உகாண்டா நாட்டு இளைஞர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க : 'அயன்' பட பாணியில் தங்கப்பசை கடத்தல்!