தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் இணை தலைமைச் சுற்றுச்சூழல் பொறியாளர் பன்னீர்செல்வம். அண்மையில் இவரது காரை வழி மறித்து லஞ்ச ஒழிப்பு துறை காவல்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது இரண்டு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதனையடுத்து, பன்னீர்செல்வத்தின் வீட்டில் சோதனை செய்து 3 கோடியே 25 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணமும், 3.5 கிலோ தங்க நகைகள் உள்ளிட்ட ஆபரணங்களும் கைப்பற்றப்பட்டன. இவற்றின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பன்னீர் செல்வம், தனக்கு முன்ஜாமீன் வழங்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அம்மனுவில், லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் என்னிடம் பறிமுதல் செய்த ரொக்கப் பணம், தங்கம் உள்ளிட்ட அனைத்து சொத்துக்களுக்கும் விளக்கம் அளிக்கத் தயாராக உள்ளதால் முன் ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இம்மனு நீதிபதி வி.பாரதிதாசன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர், மனுதாரரிடம் இருந்து பெருந்தொகை, தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், லஞ்சம் பெறுகின்ற அலுவலர்களுக்கு முன் ஜாமீன் வழங்கினால், பொது மக்களுக்கு சட்டத்தின் மீது பயம் இல்லாமல் போய்விடுவதோடு, கேலிக்கூத்தாக அமைந்து விடும் என வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, முன்ஜாமீன் மனு மீதான தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டார்.